ஊட்டியில் பரவலாக மழை:இயல்பு வாழ்க்கை பாதிப்பு
ஊட்டி: ஊட்டியில், இரண்டு மணி நேரம் மழை பெய்ததால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. நீலகிரியில் வடகிழக்கு பருவ மழை துவங்கி பரவலாக மழை பெய்து வருகிறது. மழைக்கு குன்னுார், கோத்தகிரி, மஞ்சூர் உள்ளிட்ட பகுதிகளில் ஆங்காங்கே நிலச்சரிவு, மண் சரிவு ஏற்பட்டது. நெடுஞ்சாலை துறை, உள்ளாட்சி அமைப்புகளின் கீழ், சீரமைப்பு பணிகள் நடந்து வருகிறது. அதில், குன்னுார்– பர்லியார் சாலையில் பல இடங்களில் மண்சரிவு ஏற்பட்டு சீரமைப்பு பணிகள் முழு வீச்சில் நடந்து வருகிறது. இந்நிலையில், நேற்று மதியம் ஊட்டி உட்பட சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த மழை ஒன்றரை மணி நேரம் பெய்தது. மார்க்கெட் உட்பட பிற பகுதிகளுக்கு தீபாவளி பொருட்கள் வாங்க வந்த மக்கள் பாதிக்கப்பட்டனர். மழையை தொடர்ந்து கடும் குளிர் நிலவியது. சுற்றுலா பயணியர் மாலை நேரங்களில் வெம்மை ஆடைகளை அணிந்து சுற்றுலா தலங்களை கண்டு ரசித்தனர். மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.