நகரை ஒட்டிய பகுதியில் முகாமிடும் காட்டு யானை
கூடலுார்; கூடலுார் நகரை ஒட்டிய குடியிருப்பு பகுதியில், நுழைந்த காட்டு யானை வீட்டின் சுற்றுச் சுவரை சேதப்படுத்திய சம்பவத்தால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.கூடலுாரில் வனத்தை ஓட்டிய கிராமங்களில், இரவில் நுழைந்து விவசாய பயிர்களை சேதப்படுத்தி மக்களை அச்சுறுத்தி வரும் காட்டு யானைகள், தற்போது நகர பகுதிக்கும் வர துவங்கி உள்ளன.இந்நிலையில், கூடலுார் நகரை ஒட்டிய, அக்ரஹாரம் குடியிருப்பு பகுதியில், இரவில் நுழைந்த காட்டு யானை, ஒரு வீட்டின் சுற்று சுவரை உடைத்து சேதபடுத்தியது. அச்சமடைந்த மக்கள் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். வன ஊழியர்கள் வந்து யானையை விரட்டினர்.இச்சம்பவத்தால் அச்சமடைந்துள்ள மக்கள் கூறுகையில், 'இரவில் காட்டு யானைகள் குடியிருப்பு பகுதியில் உலா வருவதால், அவசர தேவைக்கு கூட வெளியே வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. 'இவைகள் மீண்டும் குடியிருப்புக்குள் நுழையாத வகையில் அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.