சாலையில் வந்த காரை உருட்டி விட்ட காட்டு யானையால் பரபரப்பு
பந்தலுார்; பந்தலுார் அருகே இரவில் சாலையில் நின்றிருந்த யானை, காரை உருட்டி விட்டதால் ஒருவர் காயமடைந்தார்.பந்தலுாரை சேர்ந்தவர் கபூர். இவர் நாடுகாணி பகுதியில் கடை வைத்துள்ளார். நேற்று முன்தினம் இரவு கடையை பூட்டிவிட்டு, தனது காரில் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது தேவகிரி என்ற இடத்தில் வளைவான சாலை பகுதியில் கார் வந்தபோது, எதிரே நின்றிருந்த யானை, காரை தாக்கி உருட்டி விட்டது.மற்றொரு வாகனத்தில் வந்தவர்கள் சப்தம் எழுப்பி யானையை விரட்டினர். பின், காரினுள் இருந்த கபூரை காப்பாற்றி வனத்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். பொதுமக்கள் மற்றும் வனத்துறையினர் இணைந்து, பந்தலுார் அரசு மருத்துவமனைக்கு அவரை அழைத்து சென்றனர். காயத்துக்கு சிகிச்சை பெற்ற பின் வீட்டில் கொண்டு போய் விட்டனர். அப்பகுதியில் வனத்துறையினர் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.