வாகனத்தை விரட்டிய காட்டு யானைகள்; உயிர் தப்பிய சுற்றுலா பயணிகள்
கூடலுார்; முதுமலை எல்லையில் உள்ள, பந்திப்பூர் புலிகள் காப்பகத்தில், இரண்டு காட்டு யானைகள் வாகனங்களை விரட்டிய சம்பவத்தில், சுற்றுலா பயணிகள் உயிர் தப்பினர். முதுமலை புலிகள் காப்பகத்தை ஒட்டி கர்நாடகா பந்திப்பூர் புலிகள் காப்பகம் அமைந்துள்ளது. இவ்வழியாக செல்லும் மைசூரு, தேசிய நெடுஞ்சாலையில் பயணிக்கும் சுற்றுலா பயணிகள் சிலர், சாலையோரம் உலாவரும் யானைகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். ஆக., மாதம், செல்பி எடுக்க முயன்றவரை காட்டு யானை விரட்டி தாக்கியது. அதிர்ஷ்டவசமாக காயங்களுடன் உயிர்த்தப்பினார். சில தினங்களுக்கு முன், சுற்றுலா பயணி ஒருவர், ஆபத்தை உணராது ஓடும் காரின் மீது ஏறி மொபைல் போனில் படம் எடுத்து சென்றார். இந்நிலையில், நேற்று முன்தினம், திடீரென சாலைக்குள் நுழைந்த காட்டு யானை, அப்வழியாக சென்ற சுற்றுலா வாகனத்தை ஆக்ரோஷமாக விரட்டியது. டிரவைர் வாகனத்தை பின்னால் இயக்கி உயிர் தப்பினார். தொடர்ந்து யானைகள் வனப்பகுதிக்குள் சென்றன. இது தொடர்பான 'வீடியோ' சமூக வலைத்தளங்களில் வைரலாகி உள்ளது. வனவிலங்கு ஆர்வலர்கள் கூறுகையில், 'இச்சாலையில் பயணிக்கும் சுற்றுலா பயணிகள் சிலர், வனவிலங்குகளுக்கு குறிப்பாக யானைகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் ஆக்ரோசமடையும் அவைகள், சுற்றுலா பயணிகளை தாக்கும் ஆபத்து உள்ளது. இதனை தடுக்க வனத்துறையினர், சாலையில் கண்காணிப்பு பணிகளை தீவிர படுத்த வேண்டும்,' என்றனர்.