பா.ஜ., 3வது முறையும் ஹாட்ரிக் அடிக்குமா? பாலக்காட்டில் சூடுபிடித்தது அரசியல் களம்
பாலக்காடு: பாலக்காடு நகராட்சியில் ஆட்சியைக் கைப்பற்ற மூன்று கூட்டணிகள் சார்பிலும், அரசியல் நகர்வுகளை துவங்கியுள்ளனர். கேரளாவில், உள்ளாட்சித் தேர்தல் நிறைவடைந்து, கடந்த 13ம் தேதி ஓட்டு எண்ணிக்கை நடந்தது. பாலக்காடு மாவட்டத்தில் ஊராட்சி, பேரூராட்சி, மாவட்ட ஊராட்சி, நகராட்சிகளில் 2020ல் நடந்த தேர்தலை விட, காங்கிரஸ் கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், பாலக்காடு நகராட்சியில், மொத்தம் உள்ள, 53 இடங்களில், பா.ஜ. 25 இடங்களிலும், காங்கிரஸ் கூட்டணி 18 இடங்களிலும், மா.கம்யூ., கூட்டணி 9 இடங்களிலும், சுயேச்சை ஒரு இடத்திலும் வெற்றி பெற்றுள்ளனர். பெரும்பான்மைக்கு, 27 இடங்கள் தேவை. ஆட்சியை தக்க வைக்க பா.ஜ.,வுக்கு இன்னும் இரு உறுப்பினர்கள் ஆதரவு தேவை. அதே நேரத்தில், காங்கிரஸ் கூட்டணியும், மா.கம்யூ., கூட்டணியும் கைகோர்த்து ஆட்சி செய்ய ஆலோசனை செய்து வருகின்றனர். ஆனால் இந்த முயற்சி, சட்டசபை தேர்தலை பாதிக்குமோ என்ற அச்சமும் இரு கூட்டணிகளுக்கும் உள்ளது. அதனால் மாநில நிர்வாகத்துடன் ஆலோசனை செய்து முடிவெடுக்கலாம் என்ற நிலைப்பாட்டில் இரு கூட்டணிகளும் உள்ளன. சுயேச்சையாக வெற்றி பெற்ற ரஷீதை தலைவர் வேட்பாளராக அறிவித்து, காங்., மா.கம்யூ., கூட்டணி ஆதரவு அளிக்கவும் திட்டமிட்டு வருகிறது. இதை தடுக்கும் முயற்சியில் பா.ஜ. தீவிரமாக உள்ளது. அதேநேரத்தில், ஆட்சி அமைக்க, 27 சீட்டுகள் வேண்டும் என்ற நிலையில் பா.ஜ.,வினர், காங்., கூட்டணியில் இருந்து இருவரை இழுக்கும் முயற்சியிலும் ஈடுபட்டுள்ளனர். இரு கூட்டணிகளையும் ஆட்சி அமைக்கவிடாமல் தடுத்து, பா.ஜ., மூன்றாவது முறையும் ஹாட்ரிக் அடிக்குமா என்பதை பொருத்திருந்து பார்ப்போம்.