உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / வனப்பகுதியை காக்கும் வேட்டை தடுப்பு காவலர்களுக்கு பணி நிரந்தரம் கிடைக்குமா...? குடும்பத்தினரின் எதிர்காலத்தை கருதி நடவடிக்கை அவசியம்

வனப்பகுதியை காக்கும் வேட்டை தடுப்பு காவலர்களுக்கு பணி நிரந்தரம் கிடைக்குமா...? குடும்பத்தினரின் எதிர்காலத்தை கருதி நடவடிக்கை அவசியம்

குன்னுார்: 'நீலகிரியில் வனப்பகுதியில் பணியாற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள், அதிவிரைவு மீட்பு படையினரை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்,' என்ற கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.மாநிலத்தில் வனவிலங்கு பாதுகாப்பு, மனித-விலங்கு மோதல் மற்றும் மரங்கள் கடத்தலை தடுக்க வனத்துறையில், வேட்டை தடுப்பு காவலர்கள் மற்றும் வன பாதுகாப்பு குழுவினர். அதிவிரைவு மீட்பு படையினர் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பணிபுரிகின்றனர். நீலகிரி மாவட்டத்தில், 150 பேர் பணிபுரிகின்றனர்.இவர்கள், 'வனப்பகுதிகளில் வன அதிகாரிகளின் வாகனங்களை ஓட்டுதல்; யானை, கரடி, சிறுத்தை உள்ளிட்ட வனவிலங்குகள் குடியிருப்புகளுக்குள் வருவதை கண்காணித்து தடுத்து விரட்டுதல்; வேட்டை வழக்குகளுக்கு உதவி செய்தல்; கணக்கெடுப்பு பணி; 'டிரக்கிங்' செல்பவர்களை அழைத்து செல்லுதல்,' உள்ளிட்ட பல பணிகளை செய்து வருகின்றனர். வனப்பகுதியில் இருப்பதால், இவர்களின் பாதுகாப்புக்கு உத்தரவாதமில்லை. எனினும், இவர்களுக்கான அரசின் சலுகைகளை கிடைப்பதில் இழுபறி நிலவுகிறது.

பணி நிரந்தரம் இல்லை

மாவட்டத்தில், பல ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வரும் வேட்டை தடுப்பு காவலர்களை பணி நிரந்தரம் செய்ய கோரி, பலமுறை அரசிடம் வன சங்கங்கள் வாயிலயாக பல ஆண்டுகளாக வலியுறுத்தியும் இதுவரை எந்த நடவடிக்கை எடுக்கப்படவில்லை. கடந்த, 2019-ல், அ.தி.மு.க., ஆட்சியில் வேட்டை தடுப்பு காவலர்கள் குறித்த தகவல்கள் சேகரிக்கப்பட்டு நிரந்தரம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது. துவக்கத்தில், 4,125 ரூபாய் சம்பளம் வழங்கப்பட்டது. தொடர்ந்து, 12,000 ரூபாயாக சம்பளம் உயர்த்தப்பட்டது. அதன்பின், குன்னுார் தொகுதி எம்.எல்.ஏ., ராமச்சந்திரன், வனத்துறை அமைச்சராக இருந்தபோது, 'மாநிலம் முழுவதும் வேட்டை தடுப்பு காவலர்களை அதிகரித்து, சம்பளம் உயர்த்தப்படும்,' என, கூறினார். அதன்பின், கடந்த, 3 மாதங்களாக, 15,625 ரூபாய் சம்பளம் வழங்கப்பட்டு வருகிறது.

சம்பளம் வழங்குவதில் தாமதம்

ஆனால், மாதந்தோறும், 7ம் தேதியில் இருந்து, 10ம் தேதிக்குள் தாமதமாக சம்பளம் வழங்கப்படுகிறது. அதுவும் நேரடியாக வங்கி கணக்கில் செலுத்தாமல், அந்தந்த அலுவலகம் வாயிலாக வழங்குவதால் மேலும் தாமதம் ஏற்படுகிறது. மேலும், கடந்த, 7 ஆண்டுகளுக்கு வழங்கப்பட்டு வந்த, தீபாவளி போனஸ் திடீரென நிறுத்தப்பட்டது. இதனை மீண்டும் வழங்க கோரி பல முறை வலியுறுத்தியும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. முக்கிய கோரிக்கையான பணி நிரந்தரம் என்பது இன்னும் 'கனவாகத்தான்' உள்ளது.

ஆய்வு செய்யப்படும்

நீலகிரி மாவட்ட வன அலுவலர் கவுதம் கூறுகையில், ''வேட்டை தடுப்பு காவலர்கள், அதிவிரைவு மீட்பு படையினர், வேட்டையாடுதல் தடுப்பு படை ஆகியவற்றில், 142 பேர் பணியாற்றுகின்றனர். 10 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றியவர்கள் நிரந்தரம் செய்யப்பட்டுள்ளனரா என்பது குறித்தும், ஏற்கனவே போனஸ் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளதா என்பது குறித்தும் ஆய்வு செய்யப்படும். இவர்களின் கோரிக்கை குறித்து, உயர் அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்படும்,'' என்றார்.

பலன்கள் ஏதும் கிடைக்கவில்லை

வேட்டை தடுப்பு காவலர்கள் சிலர் கூறுகையில், 'நீலகிரியில், 10 ஆண்டுகள் முதல் 30 ஆண்டுகளாக பணியாற்றி வரும் நிலையில், 86 பேர் ஏற்கனவே பட்டியலில் இருந்தும், நிரந்தரம் செய்யவில்லை. இதை தவிர, 100 பேருக்கும் மேற்பட்டோர் பல ஆண்டுகளாக பணிபுரிகின்றனர். எங்களுக்கு பண்டிகை கால போனஸ் எதுவும் வழங்கப்படுவதில்லை. பிள்ளைகளுக்கு பள்ளி, கல்லுாரியில் சேர்க்கைக்கான கல்வி உதவி தொகை கிடைக்கவில்லை. மாநில முதல்வர், வனத்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை