சகதியில் இருந்து மீளுமா ஈளாடா தடுப்பணை
கோத்தகிரி: -கோத்தகிரி ஈளாடா தடுப்பணையில் தண்ணீர் இருப்பு இருந்தாலும், தண்ணீர் சேமிப்பை அதிகரிக்க தூர்வாரி அணையை ஆழப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வலியுறுத்தப்பட்டுள்ளது. கோத்தகிரி நகராட்சிக்கு உட்பட்ட, 21 வார்டுகளில், 30 ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். நகர மக்களுக்கு ஈளாடா தடுப்பணையில் இருந்து, தண்ணீர் வினியோகிக்கப்படுகிறது. தடுப்பணையில் இருந்து, குழாய்கள் வாயிலாக வரும் தண்ணீர், கேர்பெட்டாபுதூர் பகுதியில் சுத்திகரிக்கப்பட்டு, ராம்சந்த் நீரேற்று நிலையத்தில் இருந்து, தாழ்வான குடியிருப்புகளுக்கு தண்ணீர் வினியோகிக்கப்படுகிறது. வறட்சி நாட்களில், தண்ணீர் தேவையை சமாளிக்க ஏதுவாக, மத்திய அரசின் அம்ரித் குடிநீர் வினியோக திட்டத்தில், 43 கோடி ரூபாய் மதிப்பிட்டில் நகரப்பகுதியில், 9 வார்டுகளில் உள்ள அனைத்து குடியிருப்புகளுக்கு தனித்தனியாக தண்ணீர் கிடைக்கும் வகையில், குழாய்கள் பதிக்கப்பட்டுள்ளன. பணிகள் நிறைவடைந்த நிலையில், சோதனை ஓட்டமும் விடப்பட்டுள்ளது. இதனால், நகர பகுதிக்கு தண்ணீர் தேவைக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. இருப்பினும், ஈளாடா தடுப்பணையில் தண்ணீர் இருப்பை அதிகப்படுத்த, மழை நீரை சேமிக்க ஏதுவாக, ஆழமாக தூர்வார நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.