உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / தோடரின எம்ராய்டரி பொருட்கள் விற்ற பெண் ஊட்டியில் கைது

தோடரின எம்ராய்டரி பொருட்கள் விற்ற பெண் ஊட்டியில் கைது

ஊட்டி: -புவிசார் குறியீடு பெற்ற தோடரின எம்ராய்டரி பொருட்களை, வெளிநபர்கள் தயாரித்து விற்பனை செய்த விவகாரத்தில், பெண் ஒருவர் கைது செய்யப்பட்டார். நீலகிரி மாவட்டத்தில், தோடர் பழங்குடியின மக்கள் மந்து என்ற பகுதிகளில் வாழ்ந்து வருகின்றனர். பெண்கள் பூத்துகுலி எனப்படும் போர்வை, ஸ்வெட்டர், மப்ளர் உள்ளிட்ட பல்வேறு பின்னலாடை பொருட்களை தயாரித்து விற்பனை செய்து வருவாய் ஈட்டுகின்றனர். தனித்துவம் வாய்ந்த இவர்கள் தயாரிக்கும் எம்ராய்டரி பின்னலாடை பொருட்களுக்கு, 2008 ல் புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது. சமீப காலமாக, ஊட்டியை சேர்ந்த தோடர் அல்லாத ஷீலா என்பவர், அதிக ஆட்களை பணியமர்த்தி கைவினை பின்னலாடைகளை தயாரித்து விற்பனை செய்து வந்துள்ளார். இதனால், தோடர் பெண்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறி, தோடர் பழங்குடியின பெண்கள், கடந்த, 6ம் தேதி ஊட்டி எஸ்.பி., அலுவலகத்தில் புகார் அளித்தனர். தோடரின பெண்கள் மற்றும் குற்றம் சாட்டப்பட்ட ஷீலா ஆகியோரிடம், போலீசார், கடந்த, 11ம் தேதி பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது, தோடரின பெண்களை திட்டிய ஷீலா, கொலை மிரட்டல் விடுத்ததாக தெரிகிறது. இதனை தொடர்ந்து, ஷீலா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, ஊட்டி நகர மத்திய போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளிக்கப்பட்டது. அதன்படி, பழங்குடியினர் வன்கொடுமை சட்டத்தின் கீழ், வழக்கு பதிவு செய்த போலீசார், ஷீலாவை நேற்று முன்தினம் கைது செய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி