இ--பாஸ் சோதனை சாவடியில் பூம் கேரியர் அமைக்கும் பணி தீவிரம்
கூடலுார்,; கூடலுார், சில்வர்கிளவுட்; மசினகுடி சோதனை மையங்கள் வழியாக, ஊட்டிக்கு செல்லும் சுற்றுலா வாகனங்களில், இ--பாஸ் சோதனை செய்ய வசதியாக, 'பூம் கேரியர்' அமைக்கும் பணி நடந்து வருகிறது.ஊட்டிக்கு அதிக வாகனங்கள் வந்து செல்வதால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதை தடுக்க, கடந்த ஆண்டு மே, 7ம் தேதி முதல் இ--பாஸ் நடைமுறை கொண்டு வரப்பட்டது. துவக்கத்தில், விண்ணப்பித்த அனைவருக்கும் இ-பாஸ் வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில், கோடையில் வாகன நெரிசலை கட்டுப்படுத்த, ஏப்.,1 முதல், ஊட்டிக்கு வார நாட்களில், 6000 வாகனங்களும், இறுதி நாட்களில், 8000 வாகனங்கள் அனுமதிக்க ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.இந்த உத்தரவை, மாவட்ட நிர்வாகம் அமல்படுத்தி உள்ளது. இந்நிலையில், ஐகோர்ட் உத்தரவுப்படி, தற்போது கூடுதலாக தினமும், 500 வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றன. கேரளா, கர்நாடகாவில் இருந்து கூடலுார் வழியாக ஊட்டியில் உள்ள சுற்றுலா தளங்களுக்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு, கூடலுார் சில்வர் கிளவுட்; மசினகுடியில் இ-பாஸ் சோதனை மேற்கொள்ளப்படுகிறது. இ--பாஸ் சோதனை செய்த பின்பு அனுமதி வழங்கப்படுகிறது.இதனிடையே, வாகன பதிவு எண் வாயிலாக, தானியங்கி முறையில் இ--பாஸ் சோதனை செய்யும் வகையில் 'பூம் கேரியர்' அமைக்கும் பணி நடந்து வருகிறது. வருவாய் துறையினர் கூறுகையில்,' முதற்கட்டமாக மாவட்டத்தின் இரு மையங்களில்,' பூம் கேரியர்' அமைப்பதற்கான பணிகள் துவங்கி நடந்து வருகிறது. விரைவில், பயன்பாட்டுக்கு வரும். இதன் மூலம், இ--பாஸ் பெற்று வரும் வாகனங்கள் காத்திருக்க வேண்டிய அவசியம் இருக்காது' என்றனர்.