நீலகிரியில் 9 இடங்களில் உலக சாதனை ஹாக்கி
குன்னுார்: உலக சாதனைக்காக, வரும் 7ம் தேதி நாடு முழுவதும் நடக்கும் ஹாக்கி விளையாட்டு, நீலகிரியில் 9 இடங்களில் நடக்கிறது. நாட்டில் நூற்றாண்டை எட்டிய ஹாக்கி விளையாட்டை சிறப்பிக்க நாடு முழுவதும் கொண்டாட்டங்களில் ஈடுபட ஹாக்கி இந்தியா அமைப்பு ஏற்பாடு செய்துள்ளது. இதன் முக்கிய நிகழ்வாக, வரும் 7ம் தேதி காலை 7:00 மணி முதல் 10:00 மணி வரை, நாடு முழுவதும் ஹாக்கி விளையாட்டு நடத்தப்படுகிறது. நீலகிரி மாவட்டத்தில், ஹாக்கி நீல்கிரீஸ் அமைப்பின் சார்பில், குன்னூரில் அறிஞர் அண்ணா அரசு பள்ளி. அருவங்காடு கார்டைட் பள்ளி, உபதலை அரசு பள்ளி, ஜெகதளா கிராமம், மஞ்சூர் சாம்ராஜ் பள்ளி, ஊட்டியில் செயின்ட் ஹில்டாஸ், ஹெப்ரான் பள்ளி, குட்ஷெப்பர்டு பள்ளி, செயின்ட் ஜார்ஜ் பள்ளி என 9 மைதானங்களில், ஒரே நேரத்தில் ஹாக்கி விளையாட்டு நடத்தப்படுகிறது. 300க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள், முன்னாள் வீரர்கள், தற்போதைய விளையாட்டு வீரர்கள் விளையாட பதிவு செய்துள்ளனர். ஏற்பாடுகளை ஹாக்கி நீல்கிரீஸ் அமைப்பு தலைவர் அனந்தகிருஷ்ணன், செயலாளர் சுரேஷ் குமார், பொருளாளர் ராஜா மற்றும் நிர்வாகிகள் செய்து வருகின்றனர். அமைப்பு நிர்வாகிகள் கூறுகையில், 'நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான இடங்களில் ஒரே குறிப்பிட்ட நேரத்தில் உலக சாதனைக்காக ஹாக்கி விளையாட்டில் ஈடுபட்டு, கூகுல் மேப் உதவியுடன் பதிவு செய்து, சர்வதேச ஹாக்கி சம்மேளனத்தில் சமர்ப்பிக்கப்பட உள்ளது. ஹாக்கி விளையாட்டில் அதிகம் ஆர்வம் கொண்ட நீலகிரி மாவட்டத்தில் அதிகளவில் பங்கேற்கின்றனர்' என்றனர்.