உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெரம்பலூர் / அரசு இடத்தை ஆக்கிரமித்து விளைச்சல் வி.ஏ.ஓ.,விடம் கடிந்து கொண்ட கலெக்டர்

அரசு இடத்தை ஆக்கிரமித்து விளைச்சல் வி.ஏ.ஓ.,விடம் கடிந்து கொண்ட கலெக்டர்

பெரம்பலுார்:பெரம்பலுார் மாவட்டம், வேப்பூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பெரிய வெண்மணி, நல்லறிக்கை, காடூர் உள்ளிட்ட பகுதிகளில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை, வேளாண்மை பொறியியல் துறைகளின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வேளாண் வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து கலெக்டர் கற்பகம் நேற்று நேரில் பார்வையிட்டார். அப்போது, காடூர் கிராமத்தில், வேளாண் பொறியியல் துறை வாயிலாக தடுப்பணை அமைக்கப்படும் பணிகளை பார்வையிட்டார். அப்பகுதியில் நீர்நிலைக்கு அருகே இருக்கும் அரசு நிலங்கள் சிலரால் ஆக்கிரமிக்கப்பட்டு, அங்கு நெல் பயிரிடப்பட்டுள்ளதை பார்த்த கலெக்டர், அந்த இடத்துக்கான அரசு பதிவேட்டை ஆய்வு செய்தார். அப்போது, அந்த இடம் அரசுக்கு சொந்தமானது என்றும், அரசு நிலத்தை பல ஆண்டுகளாக ஆக்கிரமித்து பயிரிட்டு வந்ததும் தெரியவந்தது. இதனால், ஆத்திரமடைந்த கலெக்டர் கற்பகம், அரசுக்கு சொந்தமான இடத்தை, அறுவடை முடிந்ததும் மீட்குமாறு, அக்கிராம வி.ஏ.ஓ.,விடம் கடிந்து கொண்டார். கலெக்டரின் இந்த நடவடிக்கையை பார்த்த பொதுமக்கள் இக்கிராமத்தில் மேலும் அரசுக்கு சொந்தமான சில இடங்கள் தனி நபர் ஆக்கிரமிப்பில் உள்ளது; அதையும் மீட்க வேண்டும் என்றனர். உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் கற்பகம் உறுதியளித்தார். இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி