பஞ்., தலைவரின் கணவரை வெட்டிய 2 சிறுவர்கள் கைது
பாடாலுார்:பெரம்பலுார் மாவட்டம், செட்டிக்குளம்பஞ்., தலைவர் கலா, 35; தி.மு.க.,வைச் சேர்ந்தவர். இவரது கணவர் தங்கராசு, 43. கஞ்சா விற்பதை போலீசாருக்கு போட்டுக் கொடுத்ததாக, அப்பகுதியைச் சேர்ந்த ஆறு சிறுவர்களுக்கும், தங்கராசுக்கும் முன்விரோதம் இருந்தது. தீபாவளி அன்று, கஞ்சா விற்கும் சிறுவர்கள் சிலர், செட்டிக்குளம் மெயின் ரோட்டில் சென்றவர்களிடம் தகராறு செய்தனர். இதை, தங்கராசு தட்டி கேட்டதுடன், கஞ்சா விற்பனை மற்றும் ரவுடியிசத்தில் ஈடுபடுவதாக பெயர் பட்டியலை போலீசுக்கு கொடுத்ததாக தெரிகிறது. இதனால், தங்கராசை தீர்த்துக்கட்ட, சிறுவர்கள் முடிவு செய்தனர்.நேற்று முன்தினம் இரவு, 8:00 மணிக்கு, தங்கராசு அவருக்கு சொந்தமான வெங்காய கொட்டகையில், செல்லையா என்பவருடன் பேசிக் கொண்டிருந்த போது, அங்கு வந்த, 16, 17 வயதுடைய இரு சிறுவர்கள் தங்கராசை அரிவாளால் வெட்ட முயன்றனர். சுதாரித்த தங்கராசு தடுத்தபோது, மூன்று விரல்களில் வெட்டு விழுந்தது. பாடாலுார் போலீசார், இரு சிறுவர்களை நேற்று கைது செய்து, திருச்சி சீர்திருத்த பள்ளியில் சேர்த்தனர்.