உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெரம்பலூர் / ரூ.18.10 லட்சம் இழப்பீடு தர அரசு டாக்டருக்கு உத்தரவு

ரூ.18.10 லட்சம் இழப்பீடு தர அரசு டாக்டருக்கு உத்தரவு

பெரம்பலுார்:கடலுார் மாவட்டம், திட்டக்குடி தாலுகா, புலியக்கரம்பலுார் கிராமத்தை சேர்ந்தவர் ரமேஷ், 30, ஹோட்டலில் வேலை பார்த்த இவருக்கு திருமணமாகி மனைவி, மூன்று குழந்தைகள் உள்ளன. இவர், பிப்., 28ல் புலியக்கரம்பலுாரில் இருந்து கல்பூண்டிக்கு டூ - வீலரில் சென்று திரும்பி கொண்டிருந்தார்.அப்போது, டிராக்டர் மோதி வலது கை, காலில் படுகாயம் ஏற்பட்டது. பெரம்பலுார், அரசு தலைமை மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவருக்கு எலும்பு மூட்டு அறுவை சிகிச்சை டாக்டர் சிகிச்சை அளித்தார்.மறுநாள், அவர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு பரிசோதித்த டாக்டர், வலது காலை அகற்ற வேண்டும் என கூறினார். ரமேஷின் மனைவி மல்லிகா, தன் கணவரை தனியார் மருத்துவமனையில் சேர்த்தார். அங்கும் டாக்டர்கள் இதே பதிலை கூறியதால் வலது கால் அகற்றப்பட்டது. சிகிச்சைக்கு பின் வீடு திரும்பிய ரமேஷ், படுத்த படுக்கையாக வருமானம் ஏதுமின்றி கஷ்டப்படுகிறார். இதனால், மன உளைச்சலுக்கு ஆளான மல்லிகா, பெரம்பலுார் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தார்.பெரம்பலுார் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணைய தலைவர் ஜவகர், விசாரித்து, 'ரமேஷுக்கு அலட்சியமாக சிகிச்சையளித்த பெரம்பலுார் அரசு தலைமை மருத்துவமனை எலும்பு மூட்டு அறுவை சிகிச்சை டாக்டர், இழப்பீட்டு தொகையாக, 18 லட்சம் ரூபாய், வழக்கு செலவு தொகையாக 10,000 ரூபாய் என, 18 லட்சத்து 10,000 ரூபாயை ரமேஷின் மனைவி மல்லிகாவுக்கு வழங்க வேண்டும்' என, தீர்ப்பளித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி