உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெரம்பலூர் / திருமாவுடன் தே.மு.தி.க., சுதீஷ் சந்திப்பு தி.மு.க., கூட்டணிக்கு அச்சாரமா?

திருமாவுடன் தே.மு.தி.க., சுதீஷ் சந்திப்பு தி.மு.க., கூட்டணிக்கு அச்சாரமா?

பெரம்பலுார்: விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனை, தே.மு.தி.க, பொருளாளர் சுதீஷ் பெரம்பலுாரில் நேரில் சந்தித்து பேசினார். வி.சி., தலைவர் திருமாவளவனின் சித்தி செல்லம்மாள், 78, உடல்நிலை பாதிக்கப்பட்டு, சுயநினைவு இழந்த நிலையில், பெரம்பலுாரில் உள்ள சீனிவாசன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை பலனின்றி, கடந்த 18ம் தேதி உயிரிழந்தார். அவரது இறுதிச்சடங்கில் பங்கேற்பதற்காக, திருமாவளவன் வந்தார். பெரம்பலுாரில் இருக்கும் தனலட்சுமி சீனிவாசன் நட்சத்திர ஹோட்டலில், திருமாவளவன் தங்கி இருந்தார். இதற்கிடையே, பெரம்பலுார் மற்றும் அரியலுார் மாவட்டங்களில், பிரசார பயணத்தில் ஈடுபட்டுள்ள தே.மு.தி.க., பொதுச்செயலர் பிரேமலதாவும், அதே ஹோட்டலில் அறை எடுத்து தங்கி இருந்தார். இந்நிலையில், பிரேமலதாவை சந்திப்பதற்காக, அவரது சகோதரரும் தே.மு.தி.க,, பொருளாளருமான சுதீஷ் வந்தார். அதே ஹோட்டலில் திருமாவளவன் தங்கி இருப்பதை அறிந்து, அவரை சுதீஷ் நேரில் சந்தித்தார். அப்போது, திருமாவளவனின் பிறந்த நாளுக்கு வாழ்த்து கூறியதோடு, சித்தியின் மறைவுக்கும் இரங்கல் தெரிவித்தார். அத்துடன், பிரேமலதாவும், திருமாவளவனிடம் போனில் பேசினார். இதுகுறித்து கட்சியினர் கூறுகையில், 'ஏற்கனவே, தி.மு.க., தலைவரும் முதல்வருமான ஸ்டாலினை, சென்னையில் அவரது வீட்டுக்குச் சென்று பிரேமலதாவும், சுதீசும் சந்தித்தனர். தற்போது, தி.மு.க., கூட்டணியில் முக்கிய தலைவரான திருமாவளவனை சுதீஷ் சந்தித்துள்ளார். பிரேமலதா, போனில் பேசியுள்ளார். இது, சட்டசபைத் தேர்தலில், தி.மு.க., கூட்டணியில் சேருவதற்கான அச்சாரமாக இருக்கலாம்' என தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ