மேலும் செய்திகள்
பெரம்பலுாரில் போலி டாக்டர் சிக்கினார்
20-Sep-2025
குழந்தையுடன் தாய் தீக்குளித்து தற்கொலை
16-Sep-2025
8 மாத குழந்தையுடன் தாய் தீக்குளித்து தற்கொலை
15-Sep-2025
பெரம்பலூர்: 'காவிரி குடிநீரில் கழிவு நீர் கலப்பதை தடுக்க தவறிய தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தை கண்டித்து கவுன்சிலர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது' என நகராட்சி கவுன்சில் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. பெரம்பலூர் நகராட்சி கூட்ட அரங்கில் நகராட்சியின் அவசர கூட்டம் நகராட்சி தலைவர் ராஜா தலைமையில் நடந்தது. துணை தலைவர் முகுந்தன், நகராட்சி கமிஷனர் சுரேந்திரஷா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.நகராட்சியின் 7வது வார்டு கவுன்சிலர் கனகராஜ் பேசியதாவது: பெரம்பலூர் நகராட்சிக்குட்பட்ட 21 வார்டுகளிலும் முறையாக குடிநீர் விநியோகம் செய்வதில்லை. தெருக்களில் லைட்டுகள் எரிவதில்லை இது குறித்து நகராட்சி பணியாளர்களிடம் தெரிவித்தால் அதை சீரமைக்க பணியாளர்கள் நடவடிக்கை எடுப்பதில்லை. நகராட்சி பகுதியின் பல்வேறு இடங்களில் சுகாதார சீர்கேடுகள் விளைவிக்கும் வகையில் குப்பைகள் அள்ளாததால் நகர் முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ள நிலையில் கவுன்சிலர்களுக்கு கெட்டப்பெயர் ஏற்படுத்தும் விதமாக நகராட்சி நிர்வாகம் நடந்து கொள்கிறது. பெரம்பலூர் புது பஸ் ஸ்டாண்ட் அருகில் கட்டப்பட்டு திறக்கப்படாமல் உள்ள புதிய நகராட்சி கட்டடத்தை உடனடியாக திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.நகராட்சியின் 8வது வார்டு கவுன்சிலர் பொற்கொடி பேசுகையில், ''எனது வார்டில் போதுமான சாலை வசதிகள் செய்து தரவில்லை. மக்களுக்கு விநியோகிக்கப்படும் கொள்ளிடம் கூட்டு குடிநீரில் கழிவு நீர் கலந்து விநியோகம் செய்யப்படுகிறது. இதனால் பொதுமக்களுக்கு பல்வேறு வகையான தொற்றுநோய் ஏற்பட வாய்ப்புள்ளது. இதை நகராட்சி நிர்வாகம் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்றார்.நகராட்சியின் 12வது வார்டு கவுன்சிலர் மாரிக்கண்ணன் பேசுகையில், ''நகராட்சிக்கு கட்டப்பட்டு வரும் புதிய அலுவலகத்தில் அனைத்து பணிகளும் நிறைவடைந்துள்ள நிலையில் கட்டடத்தை திறக்கவில்லை. இந்த கட்டடத்தை உடனடியாக திறக்கவில்லை எனில் அந்த கட்டடம் கால்நடை மருத்துவமனையாக மாறிவிடும். எனவே உடனடியாக புதிய கட்டடத்தை திறக்க வேண்டும்,'' என்றார்.இதேபோல கூட்டத்தில் பங்கேற்ற கவுன்சிலர்கள் பாதாள சாக்கடை திட்டத்துக்காக தோண்டப்பட்ட சாலைகளை உடனடியாக சீரமைக்க வேண்டும். தட்டுப்பாடின்றி கொள்ளிடம் கூட்டு குடிநீர் விநியோகம் செய்ய வேண்டும். மக்களுக்கு தேவையான அடிப்படை பிரச்சனைகளை உரிய காலத்தில் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.கூட்டத்தில் 1 முதல் 21 வார்டுகளுக்கும் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலம் விநியோகிக்கப்படும் குடிநீரில் கழிவு நீர் கலப்பதை தடுக்க வலியுறுத்தியும், கடந்த மூன்று மாதங்களாக முறையாக குடிநீர் விநியோகம் செய்யப்படாததை கண்டித்தும், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அலுவலகம் முன் நகராட்சி கவுன்சிலர்கள், மக்களுடன் ஆர்ப்பாட்டம் நடத்துவது.நகராட்சியின் 2, 12, 11, 20, 7, 18, 15 ஆகிய வார்டுகளில் பாதாள சாக்கடை திட்டத்துக்காக தோண்டப்பட்டு, அமைக்கப்பட்ட சிமெண்ட் சாலைகள் அனைத்தும் சீரமைக்கப்படும். நகராட்சி பகுதிகளில் உள்ள கழிவுநீர் கால்வாய், குடிநீர் விஸ்தரிப்பு, அங்கன்வாடி மையங்கள், நியாயவிலைக் கடைகள் உள்ளிட்ட பணிகள் தொகுதி மக்களவை உறுப்பினர் மேம்பாட்டு நிதி மூலம் 60 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் மேற்கொள்வது என்பன உள்ளிட்ட 99 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் கவுன்சிலர்கள் கண்ணகி, அப்துல்பாரூக், ஜெயக்குமார், ஈஸ்வரி, தாண்டாயி, அன்புதுரை, கருணாநிதி, பேபி காமராஜ், சரவணன், சிவக்குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.
20-Sep-2025
16-Sep-2025
15-Sep-2025