உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெரம்பலூர் / ரூ.80 கோடி முறைகேடு குறித்து பெரம்பலுாரில் விஜிலென்ஸ் கிடுக்கி

ரூ.80 கோடி முறைகேடு குறித்து பெரம்பலுாரில் விஜிலென்ஸ் கிடுக்கி

பெரம்பலுார்: -ஹைமாஸ் லைட், கொரோனா உபகரணங்கள் வாங்கியதாக, பெரம்பலுார் மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையில், 80 கோடி ரூபாய் வரை முறைகேடு நடந்துள்ளதாக எழுந்த புகார் குறித்து, லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் விசாரணை துவக்கி உள்ளனர்.

கலெக்டர் உடந்தை

பெரம்பலுார் கலெக்டர் அலுவலகத்தில், மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையின் கீழ் செயல்படும் ஊராட்சிகள், தணிக்கை உதவி இயக்குனர் அலுவலகம் உள்ளது.இந்த அலுவலகத்தில், அனைத்து கிராம ஊராட்சிகளிலும், உயர்கோபுர மின் விளக்குகள் அமைத்தது, கொரோனா தடுப்பு உபகரணங்கள் வாங்கியது உட்பட பல்வேறு பணிகள் நடந்துள்ளன.பணிகளுக்கு அரசு வழங்கிய நிதியை, போலி ஆவணங்களை தயார் செய்து, இத்துறை அதிகாரிகள், 2018 முதல் 2020 வரை, முறைகேடு செய்ததாகவும், இதற்கு, முன்னாள் கலெக்டர் சாந்தா உடந்தையாக இருந்ததாகவும், கிராம ஊராட்சி தலைவர்கள் குழு கூட்டமைப்பு சார்பில், சென்னை லஞ்ச ஒழிப்பு துறை இயக்குனருக்கு புகார் அனுப்பப்பட்டது.இது குறித்து, நம் நாளிதழில், 2022 ஜூலை 9ல், விரிவாக செய்தி வெளியானது. தொடர்ந்து, சென்னை, சைதாப்பேட்டையில் உள்ள தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை இயக்குனர் அலுவலக இணை இயக்குனர் அருண்மணி, பெரம்பலுார் உதவி இயக்குனர் அலுவலக வரவு, செலவு கணக்குகளை ஆய்வு செய்தார்.

வாக்குமூலம்

அப்போது, 58 கோடியே, 96 லட்சத்து, 1,120 ரூபாய் அளவுக்கு நிதி முறைகேடு நடந்திருப்பதை கண்டுபிடித்தார். அப்போது, முன்னாள் கலெக்டர் சாந்தா அறிவுறுத்தலின்படி நிதி கையாடல் நடந்ததாக, விசாரணை அதிகாரியிடம், பி.டி.ஓ., துணை பி.டி.ஓ.,க்கள், கணக்கு அலுவலர் உள்ளிட்ட ஐந்து பேர் அப்ரூவராக மாறி வாக்குமூலம் அளித்தனர்.இந்நிலையில், பெரம்பலுார் லஞ்ச ஒழிப்பு போலீஸ் டி.எஸ்.பி., ஹேமசித்ரா தலைமையில், இன்ஸ்பெக்டர் ராமேஷ்வரி, விஜயலட்சுமி ஆகியோர் கொண்ட குழுவினர், நேற்று முதல் பெரம்பலுார் மாவட்ட ஊரக வளர்ச்சி துறையில் நடந்துள்ள முறைகேடு குறித்து சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் விசாரித்து வருகின்றனர்.விசாரணை ஒரு வாரம் தொடரும் எனவும், பல்வேறு திட்டங்களில், 80 கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடு நடந்துள்ளது தெரியவந்துள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். விசாரணை முடிவில், உயர் அதிகாரிகள் பலரும் சிக்குவர் என, தெரிகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை