| ADDED : ஜூன் 17, 2024 06:34 AM
புதுக்கோட்டை : புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் அருகே குளமங்கலம் கிராமத்தில் பெருங்காரையடி மீண்ட அய்யனார் கோவில் உள்ளது. இக்கோவில் முன்பு அமைக்கப்பட்டுள்ள 33 அடி உயரமுள்ள குதிரை சிலை ஆசியாவிலேயே மிகப்பெரிய குதிரை சிலையாக கருதப்படுகிறது.இக்கோவிலில் கும்பாபிஷேக விழா ஏற்கனவே, 2009ம் ஆண்டு நடைபெற்றது. 15 ஆண்டுகளுக்கு பிறகு இக்கோவிலில் கும்பாபிஷேக விழாவை இந்த ஆண்டு நடத்த திட்டமிடப்பட்டு அதற்கான திருப்பணி வேலைகள் முழுமையாக முடிந்தன.நேற்று பெருங்காரையடி மீண்ட அய்யனார் கோவில், அதன் பரிவார தெய்வங்கள் மற்றும் குதிரை சிலையின் கும்பாபிஷேக விழா நடைபெற்றது. மூன்று நாட்களாக யாகசாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட புனித நீர் குடங்களை யானை, குதிரைகளின் அணிவகுப்போடு மேளதாளங்கள் முழங்க சிவாச்சாரியார்கள் ஊர்வலமாக கோவில் விமானம் மற்றும் குதிரை சிலையின் மேல் எடுத்து வந்து வேத மந்திரங்கள் முழங்க புனித நீரை கோவில் கலசங்களில் ஊற்றினர்.இந்தகும்பாபிஷேக விழாவில் அப்பகுதி மக்கள் மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இருந்து வந்திருந்த 50,000த்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். இவ்விழாவை முன்னிட்டு 500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.