பழமையான அய்யனார் சிலை அறந்தாங்கி அருகே கண்டெடுப்பு
புதுக்கோட்டை: டிச. 28--: அறந்தாங்கி அரு கே பழமையான அய்யனார் சிலை கண்டெடுக்கப்பட்டது. புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி கட்டுமாவடி கடற்கரை உப்பளத்திற்கு அருகில் வரலாற்று ஆய்வாளர் பேராசிரியர் முனைவர் காளிதாஸ் குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். அங்கு, அய்யனார் சிலை ஒன்றை கண்டெடுத்தனர். காளிதாஸ் கூறியதாவது: கி.பி., 17 மற்றும், 18ம் நுாற்றாண்டுகளில், புதுக்கோட்டை மாவட்டத்தில், பவுத்த சமயம் மேலோங்கியிருந்தது. அதற்கு அடுத்தபடியாக சமணம், ஆசீவக சமயமும் மேலோங்கி வளர்ச்சி நிலையில் இருந்தன. அய்யனார் வழிபாடு என்பது ஆசீவக சமய வழிபாட்டு முறை. கண்டெடுக்கப்பட்ட இந்த அய்யனார் சிலை, ஜடா மகுட சடாபாரத்துடன் தலை முடி விரித்தபடி, காதுகளிரண்டிலும் பத்திர குண்டலங்கள் அணிந்தும், கழுத்தில் ஆபரணங்களுடன் மார்பில் முப்புரி நுால்கொண்டும், வலது கையில் சாட்டையுடனும் காட்சி தருகின்றார். ஒன்றரை அடி உயரமும் அரை அடி அகலமும் கொண்ட இந்த சிலையை, அப்பகுதி மக்கள் அபயம் காத்த முனி என அழைத்து வழிபடுகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.