உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுக்கோட்டை / பஸ் ஸ்டாண்டில் விடிய, விடிய கடைதிறப்பு புதுகை போலீஸார் அனுமதி வழங்கல்

பஸ் ஸ்டாண்டில் விடிய, விடிய கடைதிறப்பு புதுகை போலீஸார் அனுமதி வழங்கல்

புதுக்கோட்டை : புதுக்கோட்டை புதிய பஸ் ஸ்டாண்டுக்குள் பயணிகளின் நலன்கருதி இரவு விடிய, விடிய கடைகளை திறந்துவைக்க போலீஸார் அனுமதி வழங்கியுள்ளனர். புதுக்கோட்டை புதிய பஸ் ஸ்டாண்டில் இருந்து வெளி மாநிலங்கள், மாவட்டங்கள் மற்றும் உள்ளூர் பகுதிகளுக்கு 300க்கும் மேற்பட்ட பஸ்கள் இரவு, பகலாக இயக்கப்பட்டு வருகிறது. இதன்மூலம் நாள்தோறும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயணிகள் வந்துசெல்கின்றனர். பஸ் ஸ்டான்டுக்குள் நகராட்சி நிர்வாகத்தின் சார்பில் கடைகள் கட்டி வாடகைக்கு விடப்பட்டுள்ளது. அனைத்து கடைகளும் இரவு,பகலாக இயங்கிவந்தது. இந்நிலையில் பஸ் ஸ்டான்டுக்குள் பயணிகள் போர்வையில் சமூக விரோதிகள் பலர் முகாமிடுவது தெரியவந்தது. இவர்களால் பயணிகளின் உடமைகளுக்கு பாதுகாப்பற்ற நிலை தொடர்ந்தது. இதையடுத்து பஸ் ஸ்டாண்டுக்குள் அதிகாலை ஐந்துமணி முதல் இரவு 11 மணிவரை மட்டுமே கடைகள் திறந்திருக்க வேண்டும் என கடை உரிமையாளர்களுக்கு போலீஸார் உத்தரவிட்டனர். இரவு 11 மணிக்கு மேல் கடைகள் திறந்திருந்தால் தொடர்புடைய கடை உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் போலீஸார் எச்சரித்திருந்தனர். இதையடுத்து இரவு 11 மணிக்கு மேல் கடைகளை திறந்து வியாபாரம் செய்வத பஸ் ஸ்டான்ட் வியாபாரிகள் தவிர்த்தனர். இதன்காரணமாக நள்ளிரவு நேரங்களில் புதிய பஸ் ஸ்டான்ட் இருளில் மூழ்கியதோடு, வெளிமாவட்டங்களிலிருந்து வரும் பயணிகள் மிகுந்த பரிதவிப்புக்கு உள்ளாயினர். குடிக்க தண்ணீர் போலும் கிடைக்காமல் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை சிரமத்துக்கு உள்ளாயினர். கடைகள் அடைக்கப்பட்டதால் திருட்டு, வழிப்பறி, பிக்பாக்கட் போன்ற குற்றச் செயல்கள் அதிகரித்ததே தவிர குறைந்தபாடில்லை. மேலும் வெளிமாவட்டங்களிலிருந்து வரும் பெண் பயணிகள் பீதியுடன் பொழுதை கழிக்கவேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டனர். பயணிகளின் நலன்கருதி பஸ் ஸ்டான்டுக்குள் இரவு முழுவதும் கடைகளை திறக்க அனுமதிக்குமாறு வியாபாரிகள் மற்றும் வர்த்தக சங்கம், பயணிகள் நல சங்கம் உள்ளிட்ட தன்னார்வ அமைப்புகளின் சார்பில் கோரிக்கை வலுத்தது. நிலமையை உணர்ந்துகொண்ட மாவட்ட போலீஸ் துறை பயணிகளின் நலன் கருதி புதிய பஸ் ஸ்டான்டுக்குள் இரவு விடிய, விடிய கடைகளை திறந்து வியாபாரம் செய்ய கடந்த 22ம் தேதி முதல் அனுமதியளித்துள்ளது. இதற்காக புதுக்கோட்டை எஸ்.பி., முத்துசாமிக்கு பஸ் ஸ்டாண்ட் வியாபாரிகள் சங்கத் தலைவர் குணசேகரன் நன்றி தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி