உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுக்கோட்டை / வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கலாம் புதுகை மாவட்ட கலெக்டர் அழைப்பு

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கலாம் புதுகை மாவட்ட கலெக்டர் அழைப்பு

புதுக்கோட்டை: புதுக்கோட்டை கலெக்டர் மகேஸ்வரி வெளியிட்ட அறிக்கை: உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு போட்டோவுடன் கூடிய வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இவை மாவட்ட கலெக்டர் அலுவலகம், நகராட்சி அலுவலகங்கள், டவுன் பஞ்சாயத்துகள், பஞ்சாயத்து யூனியன் அலுவலகங்கள் மற்றும் பஞ்சாயத்து அலுவலகங்களில் மக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது. இதில் பெயர்கள் விடுபட்டிருந்தாலோ அல்லது புதிதாக பெயர்களை சேர்க்க விரும்பினாலோ செப்., 29ம் தேதிவரை தொடர்புடைய வாக்காளர் பதிவு அலுவலரிடம் விண்ணப்பிக்கலாம். ஆய்வுக்கு பின் தகுதியுடைய வாக்காளர்களின் பெயர் பட்டியலில் சேர்க்கப்படும். இதுபோன்று பெயர்கள் நீக்கம் செய்யவும், திருத்தம் செய்யவும் விரும்புபவர்களும் விண்ணப்பிக்கலாம். புதுக்கோட்டை மாவட்டத்தை பொறுத்தமட்டில் நடைபெறவுள்ள உள்ளாட்சி தேர்தலில் 10 லட்சத்து ஆறாயிரத்து 483 பேர் ஓட்டுபோட தகுதிபெற்றுள்ளனர். இவர்களில் ஆண்கள் ஐந்து லட்சத்து மூவாயிரத்து 506 பேர், பெண்கள் ஐந்து லட்சத்து இரண்டாயிரத்து 977 பேர். புதுக்கோட்டை மற்றும் அறந்தாங்கி நகராட்சி பகுதிகளை பொறுத்தமட்டில் ஒரு லட்சத்து 13 ஆயிரத்து 552 பேர் ஓட்டுபோட தகுதிபெற்றுள்ளனர். இவர்களில் ஆண்கள் 55 ஆயிரத்து 871 பேர். பெண்கள் 57 ஆயிரத்து 681 பேர். பொன்னமராவதி, அரிமளம், அன்னவாசல், இலுப்பூர், ஆலங்குடி, கீரமங்கலம், கறம்பக்குடி, கீரனூர் ஆகிய எட்டு டவுன் பஞ்சாயத்து பகுதிகளில் 56 ஆயிரத்து 136 பேர் ஓட்டுபோட தகுதிபெற்றுள்ளனர். இவர்களில் ஆண்கள் 28 ஆயிரத்து 234 பேர். பெண்கள் 27 ஆயிரத்து 902 பேர். இதர 13 பஞ்சாயத்து யூனியன் பகுதிகளில் உள்ள 497 கிராமப் பஞ்சாயத்துகளில் எட்டு லட்சத்து 36 ஆயிரத்து 795 பேர் ஓட்டுபோட தகுதிபெற்றுள்ளனர். இவர்களில் ஆண்கள் நான்கு லட்சத்து 19 ஆயிரத்து 401 பேர், பெண்கள் நான்கு லட்சத்து 17 ஆயிரத்து 394 பேர். தேர்தல் அறிவிப்பு வெளியான நிலையில் நன்னடத்தை விதிமுறைகளும் அமல்படுத்தப்பட்டுள்ளது. எனவே உரிமம் பெற்று துப்பாக்கி வைத்துள்ளோர் அவற்றை உடனடியாக தொடர்புடைய போலீஸ் ஸ்டேஷன்களில் ஒப்படைக்கவேண்டும். தேர்தல் பிரச்சார வாகனங்கள் பயன்படுத்தவும், மைக்செட் வைத்துக்கொள்ளவும் தொடர்புடைய தேர்தல் அலுவலர்கள் மற்றும் போலீஸாரிடம் அனுமதி பெறவேண்டும். தேர்தல் ஆணையம் நிர்ணயித்துள்ள வழிகாட்டு நெறிமுறைகளை அனைவரும் தவறாமல் பின்பற்றி மாவட்டத்தில் தேர்தல் அமைதியாக நடத்தி முடிக்க மாவட்ட நிர்வாகத்துக்கு அரசியல் கட்சியினர் அனைவரும் முழு ஒத்துழைப்பு வழங்கவேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி