மேலும் செய்திகள்
ஆத்மநாத சுவாமி கோவில் கல்வெட்டு கண்டெடுப்பு
28-Sep-2025
மீன் வளம் பெருக்கும் செயற்கை பவளப்பாறை
22-Sep-2025
கடலில் மிதந்த கஞ்சா பண்டல்கள் பறிமுதல்
12-Sep-2025
புதுக்கோட்டை: ''நகராட்சி நிதியை கூட்டுச் சேர்ந்து கொள்ளையடித்தவர்கள் நாசமா தான் போவார்கள். தெட்சிணா மூர்த்தி சுவாமியின் தண்டனையிலிருந்து தப்ப மாட்டீர்கள்,'' என காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சி கவுன்சிலர்கள் சாபமிட்ட சம்பவம் புதுக்கோட்டை நகராட்சி கூட்டத்தில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியது. புதுக்கோட்டை நகராட்சியின் அவசரக் கூட்டம் நகர்மன்றத் தலைவர் ராமதிலகம்(தி.மு.க.,) தலைமையில் நடந்தது. ஆணையர் பாலகிருஷ்ணன் உட்பட கவுன்சிலர்கள் மற்றும் நகராட்சி அலுவலர்கள் பலர் பங்கேற்றனர். கூட்டத்தில் நடந்த விவாதம் வருமாறு: இப்ராஹீம் பாபு(காங்.,): நகராட்சி பகுதிகளில் அலைந்து திரியும் தெரு நாய்களால் மக்களின் உயிருக்கு பாதுகாப்பற்ற சூழ்நிலை நிலவுகிறது. ரமலான் மாதத்தை முன்னிட்டு முஸ்லீம்கள் இரவு மற்றும் அதிகாலை நேரங்களில் தொழுகைக்காக பள்ளிவாசல்களுக்கு செல்ல முடியாத நிலை உள்ளது. நாய்களை முற்றிலுமாக ஒழிக்க நகராட்சி நிர்வாகம் போர்க்கால நடவடிக்கை எடுக்கவேண்டும். கமிஷனர்: நாய்கள் மட்டுமின்றி பன்றிகளையும் ஒழிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மாரிமுத்து(அ.தி.மு.க.,): திருவப்பூர் பகுதி மக்கள் குடிநீரின்றி தவிக்கின்றனர். குடிநீர் பற்றாக்குறையை போக்க நகராட்சி நிர்வாகம் முன்னுரிமை அடிப்படையில் நடவடிக்கை எடுக்கவேண்டும். கமிஷனர்: காவரி குடிநீர் திட்டத்தை விரிவுபடுத்துவதற்காக தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் ரூ.4.15 கோடியில் மாஸ்ட்டர் பிளான் தயாரிக்கப்பட்டு அரசுக்கு கருத்துரு அனுப்பப்பட்டுள்ளது. அனுமதி கிடைத்ததும் திட்டப் பணிகள் துவக்கப்படும். கண்ணன்(தே.மு.தி.க.,): போஸ்நகர் சுடுகாட்டில் ரூ.40 லட்சம் செலவில் அமைக்கப்பட்டுவரும் எரிவாயு தகனமேடை பணிகள் எப்போது பூர்த்தியடையும்?. கமிஷனர்: எரிவாயு தகனமேடை பணிகள் 90 சதவீதம் பூர்த்தியடைந்துள்ளது. காண்ட்ராக்டர்களின் மெத்தனப் போக்கால் 10 சதவீத பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இரண்டு மாதத்துக்குள் பணிகள் முழுமையாக முடிக்கப்படும். ஆறுமுகம்(காங்.,): உள்ளாட்சி அமைப்புக்கான பதவிகாலம் முடிவடைய இன்னும் ஒரு மாதமே உள்ளது. ஐந்து ஆண்டு பதவிவகித்தும் புதுக்கோட்டை நகர்ப்பகுதி மக்களின் குடிநீர் தேவையை கூட பூர்த்தி செய்ய முடியாதது வேதனையாக உள்ளது. நகராட்சி பணத்தை கூட்டு சேர்ந்து கொள்ளையடிப்பதில் தான் நகராட்சி நிர்வாகம் குறியாக உள்ளதே தவிர மக்கள் நலனை கவனத்தில் கொள்ளவில்லை. இன்று நடக்கின்ற அவசரக் கூட்டத்துக்கு கூட சாலை பணிகளுக்காக காண்ட்ராக்டரிடமிருந்து எட்டு சதவீத கமிஷன் தொகையை (10 லட்சம்) முன்கூட்டியே பெற்றுக் கொண்ட பின்னரே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. நகராட்சி நிர்வாகத்தில் ஊழல் என்பது புற்றுநோய் போல வேகமாக பரவிவருகிறது. ஊழலில் ஈடுபட்டுள்ளவர்கள் யாராக இருந்தாலும் சட்டத்தின் பிடியிலிருந்து தப்பலாம். ஆனால், தெய்வத்தின் தண்டனையிலிருந்து ஒருபோதும் தப்பமாட்டார்கள்.பழனியப்பன்(இ.கம்யூ.,): கேட்ட கமிஷன் தொகை கிடைக்கவில்லை என்ற ஒரே காரணத்துக்காகத்தான் வளர்ச்சிப் பணிகளுக்காக முந்தைய அரசு ஒதுக்கீடு செய்த ரூ.8.60 கோடி ரூபாய் செலவிடபடாமல் அரசுக்கே திருப்பி அனுப்பப்பட்டது. இதன் வெளிப்பாடு தான் கடந்த சட்டசபை தேர்தல் முடிவு உணர்த்தியது. மக்களின் வரிப்பணத்தை கொள்ளையடிப்பதிலும் வரையறை வேண்டும். மக்களை ஏமாற்றி நகராட்சி நிதியை கொள்ளையடித்தவர்கள் யாராக இருந்தாலும் நாசமாகத்தான் போவார்கள். அவர்களது குழந்தை, குட்டிகள் கூட உருப்படாது. நகர்ப்பகுதி மக்கள் வழிபடும் தெட்சிணாமூர்த்தி சுவாமியின் தண்டனையிலிருந்து தப்ப மாட்டீர்கள் என சாபமிட்டார். காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சி கவுன்சிலர்களின் சாபத்தால் நகராட்சி கூட்டத்தில் பெரும்பரபரப்பு நிலவியது. கவுன்சிலர்களின் ஊழல் குற்றச்சாட்டுக்கு பதிலளிக்க முடியாமல் தலைவர் மற்றும் கமிஷனர் திணறினர்.
28-Sep-2025
22-Sep-2025
12-Sep-2025