கட்சி தலைவர்கள் கண்டனம்
பழனிசாமி: புதுக்கோட்டை தெற்கு மாவட்டம், திருமயம் தெற்கு ஒன்றிய அ.தி.மு.க., சிறுபான்மை பிரிவு செயலரான சமூக ஆர்வலர் ஜெகபர் அலி, சமூக விரோதிகளால் லாரி ஏற்றி படுகொலை செய்யப்பட்டுள்ளார் என்ற செய்தி அதிர்ச்சி அளிக்கிறது. இதன் பின்னணியில் உண்மை குற்றவாளிகள், கனிமவள கொள்ளையர்களை விட்டு, லாரி டிரைவர் உள்ளிட்டோரை மட்டும் கைது செய்து, வழக்கை தி.மு.க., அரசு திசை திருப்பி வருகிறது. கனிம கொள்ளையர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல், புகார் அளித்தவரை காட்டிக் கொடுத்து, மிக மோசமான முன்னுதாரணத்தை தி.மு.க., அரசு ஏற்படுத்தியுள்ளது. உரிய விசாரணை நடத்தி, அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.அண்ணாமலை: ஜெகபர் அலி கொலை அதிர்ச்சி அளிக்கிறது. கனிமவள கொள்ளை தொடர்பாக, திருமயம் தாசில்தார், மாவட்ட கனிம வளத்துறை உதவி இயக்குனர், கலெக்டர் ஆகியோரிடம் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்காமல், தற்போது, அவரை பலி கொடுத்திருக்கின்றனர். இயற்கை வளங்களை காக்க பாடுபட்டவரின், உயிரை எடுக்கும் அளவுக்கு, தமிழகத்தில் சமூக விரோதிகளுக்கும், கொள்ளையர்களுக்குமான ஆட்சி நடக்கிறது. அரசு அதிகாரிகள், சமூக ஆர்வலர்கள் என, கனிமவள கொள்ளையை தடுக்க முயன்றவர்கள் கொல்லப்படுகின்றனர் என்றால், ஆட்சிக்கு வந்த 10வது நிமிடத்தில், மணல் கொள்ளைக்கு செல்லலாம் எனக் கூறி ஆட்சிக்கு வந்த தி.மு.க., தைரியம் இன்றி வேறென்ன?அன்புமணி: கனிமவள கொள்ளையர்களை தமிழக அரசு கட்டுப்படுத்தாததன் விளைவு தான், ஜெகபர் அலி போன்ற சமூக ஆர்வலர்கள் படுகொலைக்கு காரணம். ஜெகபர் அலி படுகொலையின் பின்னணியில், மேலும் பலர் சம்பந்தப்பட்டு இருக்கலாம் என கூறப்படுகிறது. பின்னணியை வெளிக்கொண்டு வர, இந்த வழக்கை சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரணைக்கு, அரசு உத்தரவிட வேண்டும்.