ஜனாதிபதி மாளிகை விருந்து 2 விவசாயிகளுக்கு அழைப்பு
புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூர் அருகே பரம்பூர் ஊராட்சி சேந்தன்கரை பகுதியைச் சேர்ந்த பொன்னையா, 48, என்ற விவசாயி, தன் விவசாய நிலத்தில் நெல் விவசாயமும், மீன் விவசாயமும் செய்து வரும் இவருக்கு, மத்திய அரசின் 'ஜல் சக்தி அபியான்' துறை திட்டத்தின் கீழ் தேசிய விருதுகளும், தமிழக வேளாண் பல்கலைக் கழகத்தில் வேளாண் செம்மல் விருதும் வழங்கப்பட்டுள்ளன.இதேபோல, புதுக்கோட்டை மாவட்டம், மணப்பட்டியைச் சேர்ந்த பெண் விவசாயி அமுதா, 40. இவர், புதுக்கோட்டை, சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் உள்ள விவசாய நிலங்களில், நெல் பயிர்களுக்கு ட்ரோனில் மருந்து தெளிக்கும் 'ட்ரோன் பைலட்'டாக பணிபுரிகிறார். இவர்கள் இருவரையும் கவுரவிக்கும் விதமாக, வரும் ஜன., 26 குடியரசு தினத்தன்று, ஜனாதிபதி மாளிகையில் நடக்கவிருக்கும் தேனீர் விருந்தில் பங்கேற்க அழைப்பிதழ் வந்துள்ளது.