மூதாட்டி அளித்த புகார் மனு; வாசிக்காத அதிகாரிக்கு சிக்கல்
புதுக்கோட்டை; புதுக்கோட்டை மாவட்டம், கீரனுாரைச் சேர்ந்தவர் அரசம்மாள், 77. மகன் விரட்டி விட்டதால், மகள் வீட்டில் வசிக்கும் இவர், மகன் மீது முதியோர் பாதுகாப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க, கடந்த டிச., 23ம் தேதி குறைதீர்க்கும் கூட்டத்தில் கலெக்டர் அருணாவிடம், மனு அளித்தார்.அந்த மனுவுக்கு, கீரனுார் சமூக பாதுகாப்பு திட்ட அலுவலகத்திலிருந்து, பதில் அனுப்பப்பட்டது. அதில், 'உங்களுக்கு முதியோர் உதவித்தொகை வழங்க இயலாது. வருவாய் ஈட்டக்கூடிய இரண்டு மகன்கள் இருக்கின்றனர்; 2 ஏக்கர் நிலம் இருக்கிறது' என பதில் அனுப்பினர். முதியோர் உதவித்தொகை ஏற்கனவே பெற்று வரும் நிலையில், மனுவை படிக்காமல், வேறு யாருக்கோ அனுப்ப வேண்டிய பதிலை, இவருக்கு அனுப்பியதால் அதிர்ச்சி அடைந்தார்.அந்த மூதாட்டி மற்றும் அவரது குடும்பத்தினர், கலெக்டர் அலுவலகத்திற்கு நேற்று வந்து கலெக்டர் அருணாவிடம், 'மகன் மீது முதியோர் பாதுகாப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுத்து, என் வீட்டில் வசிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்' என வலியுறுத்தினர். இது தொடர்பாக, சமூக நலத்திட்ட அதிகாரிகளிடம் விசாரித்து, நடவடிக்கை எடுப்பதாக கலெக்டர் தெரிவித்தார்.மேலும், ஏற்கனவே அளித்த மனுவை படித்து பார்க்காமல் பதில் கடிதம் அனுப்பியவர் மீது, துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என, கலெக்டர் அருணா உறுதியளித்தார்.