விராலிமலை கோரையாற்று படுகையில் தடையற்ற மணல் கொள்ளை: தடுக்க கோரிக்கை
புதுக்கோட்டை:விராலிமலை அருகே கோரையாற்று படுகையில் மணல் கொள்ளையை தடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.திருச்சி மாவட்டத்தில் இருந்து வரும் கோரையாறு புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள விராலிமலை அருகே மீனவேலி, கொடும்பாளுர் மற்றும் திருச்சி மாவட்டத்தில் உள்ள ஓலையூர், புதுார் வழியாக காவிரியில் இணைகிறது.இந்த ஆற்றுப் படுகையின் அருகாமையில் 200க்கும் மேற்பட்ட குளங்கள் உள்ளன. இந்த தண்ணீரை தேக்குவதற்காக விவசாயிகள் கோரையாற்றில் மணல் தடுப்பு அமைத்து அங்கிருந்து குளங்களுக்கு வாய்க்கால் வெட்டி நிலங்களுக்கு பயன்படுத்தி வருகின்றனர்.இதனால் இப்பகுதியில் உள்ள கிணறுகள் தண்ணீரால் நிறைந்ததோடு நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து காணப்பட்டது. பல லட்சம் ஏக்கர் நிலங்கள் இந்த தண்ணீரின் மூலம் ஆண்டுதோறும் பாசன வசதியை பெற்று வந்தன.மேலும் முல்லையூர், கத்தலுார் பகுதிகளில் சிறிய தடுப்பணைகள் பொதுப்பணித்துறையினர் மூலம் கட்டப்பட்டுள்ளது. இதன் மூலம் கிடைக்கும் தண்ணீர், வாய்க்கால் மூலம் குளங்களை சென்றடைந்து வந்தது.புதுக்கோட்டை மற்றும் திருச்சியின் எல்லைப் பகுதியில் உள்ள ஊர்களில் குடிநீருக்கு தட்டுப்பாடு இல்லாத நிலை இருந்து வந்தது. இந்த கோரையாற்றில் மணல் கொள்ளையர்கள் ஆற்றை சூறையாடி வந்தனர். இதனால் ஆற்றின் பெரும்பாலான பகுதிகள் பெரும் பள்ளங்களாக மாறி உள்ளன.வாய்க்கால்கள், வயல்கள் அனைத்தும் ஆற்றின் மட்டத்தை விட அதிக உயரத்தில் தற்போது உள்ளன. இதனால் ஆற்றில் தண்ணீர் வந்தாலும் வாய்க்கால்களில் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்த ஆற்றுப்படுகைகளில் மணல் கொள்ளையர்கள் டயர் வண்டி, டிராக்டர், டிப்பர் லாரிகளில் மணல் ஏற்றி கடத்தி விற்பனை செய்கின்றனர்.மேலும், ஆத்துப்பட்டி அருகே கோறை ஆற்றில் 2 அடி ஆழத்தில் இரண்டு வற்றாத ஊற்று உள்ளது. இந்த ஊற்றில் 10க்கும் மேற்பட்ட கிராமங்களில் வசிக்கும் பொதுமக்கள் தண்ணீரை எடுத்துச் சென்று குடிப்பதற்காக பயன்படுத்தி வருகின்றனர்.இப்பகுதியை சேர்ந்த மூன்று தலைமுறை மக்கள் இந்த ஊற்று தண்ணீரை காலம் காலமாக பயன்படுத்தி வருகின்றனர். இந்த ஊற்றை சுற்றி மணல் அதிக அளவில் இருந்துள்ளது. இந்த ஊற்றில் இருந்து 500 மீட்டர் தெற்கு படுகையில் மணல் திருட்டால் அப்பகுதியில் பள்ளங்கள் ஏற்பட்டுள்ளன.இதனால் ஊற்று தண்ணீருக்கு பாதிப்பு ஏற்படுமோ என்ற அச்சம் பொதுமக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. பல தலைமுறை மக்களின் தாகம் தீர்த்து வரும் ஊற்றைபேணி காப்பதற்காகவும், இந்தக் கோரையாற்று படுக்கையில் மணல் கொள்ளையை தடுக்க வேண்டியும் தமிழக முதல்வர், மாவட்ட கலெக்டர் உட்பட பல்வேறு அதிகாரிகளுக்கு கோரிக்கை மனு அனுப்பி உள்ளனர்.