| ADDED : மே 03, 2024 05:15 AM
கடலாடி: கடலாடி அருகே சாயல்குடியில் இருந்து முதுகுளத்துார் வழியாக பரமக்குடி செல்லும் புதிய அரசு பஸ் நேற்று காலை 8:00 மணிக்கு எதிர்பாராமல் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் 13 பயணிகள் காயமடைந்தனர்.பஸ் கடலாடி அருகே தேவர் குறிச்சி வழியாக வந்த போது எதிரில் டூவீலரில் வந்த தம்பதி எதிர்பாராமல் சாலையின் குறுக்கே வந்ததால் மோதுவதை தவிர்க்க டிரைவர் திடீர் பிரேக் அடித்ததால் நிலை தடுமாறிய அரசு பஸ் ரோட்டோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது.ஒருவானேந்தல் கிராமத்தைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி 40, பஸ்சை ஓட்டி வந்துள்ளார். பஸ் கவிழ்ந்ததில் நரசிங்க கூட்டத்தைச் சேர்ந்த முனிஸ்வரி 38, மங்கலம் கிராமத்தைச் சேர்ந்த கணேசன் 52, சாத்தங்குடி புஷ்பவல்லி 45, கருங்குளம் மேரி 55, கீழச்செல்வனுார் ரஹமத் ஆரிபா 42, பரமேஸ்வரி 37, முதுகுளத்துார் முனீஸ்வரி 35, கீரந்தை ஹேமப்பிரியா 23, சாயல்குடி பாஸ்கரி 65, சென்னை செல்வம் 48, லிங்கேஸ்வரி 42, கடலாடி சண்முகசுந்தரம் 70, பரமக்குடி பேச்சியம்மாள் 43, ஆகிய 13 பேர் காயமடைந்தனர்.காயமடைந்த பயணிகளை அப்பகுதி மக்கள் மீட்டனர். அனைவரையும் முதுகுளத்துார் அரசு மருத்துவமனைக்கும், மேல் சிகிச்சைக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கும் கொண்டு செல்லப்பட்டனர். விபத்து குறித்து கடலாடி போலீசார் விசாரிக்கின்றனர்.