தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 999 வழக்குகள் தீர்வு காணப்பட்டு ரூ.8.73 கோடி வழங்கல்
ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்டத்தில் நடந்த தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 999 வழக்குகளில் ரூ.8.73 கோடிக்கு தீர்வு காணப்பட்டது. ராமநாதபுரத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம் மாவட்ட முதன்மை நீதிபதி எஸ்.குமரகுரு தலைமையில் நடந்தது. கூடுதல் மாவட்ட நீதிபதி எஸ்.உத்தமராஜ், தலைமை குற்றவியல் நீதிபதி சி.மோகன்ராம், சார்பு நீதிபதியான சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் எம்.அகிலாதேவி, நீதித்துறை நடுவர் எண் 1 மாஜிதிஸ்திரேட் என். நிலவேஸ்வரன், நீதித்துறை நடுவர் எண் 2 மாஜிஸ்திரேட் ஜி.பிரபாகரன், கூடுதல் மகிளா நீதிபதி வெர்ஜின்வெஸ்டா, வழக்கறிஞர் சங்கத்தலைவர் எஸ்.ஜே. ேஷக் இப்ராஹிம், பொருளாளர் ஆர்.பாபு உட்பட வழக்கறிஞர்கள் பங்கேற்றனர். ராமநாதபுரம், ராமேஸ்வரம், பரமக்குடி, திருவாடானை, முதுகுளத்துார், கடலாடி, கமுதி பகுதிகளில் 10 இருக்கைகள் அமைக்கப்பட்டன. இதில் குடும்ப நல வழக்கு, மோட்டார் வாகன விபத்து வழக்கு, வங்கி வராக் கடன் வழக்கு, சிவில், கிரிமினல் வழக்குகள் என 4172 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துகொள்ளப்பட்டு 999 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. இதன் மூலம் 8 கோடியே 73 லட்சத்து 91 ஆயிரத்து 507 ரூபாய்க்கு தீர்வு காணப்பட்டு வழக்காளர்களுக்கு வழங்கப்பட்டது. இதில் வழக்கறிஞர்கள், வங்கி அலுவலர்கள், டாக்டர்கள், காப்பீடு நிறுவன அதிகாரிகள், நீதிமன்ற பணியாளர், சட்டப்பணிகள் ஆணைக்குழு பணியாளர்கள் பங்கேற்றனர்.* பரமக்குடியில் கூடுதல்மாவட்ட நீதிபதி சாந்தி, சார்பு நீதிபதி சதீஷ், மாவட்ட உரிமையியல் நீதிபதி சுப்ரமணியன், குற்றவியல் நீதிபதி பாண்டி மகாராஜா, பரமக்குடி வக்கீல் சங்க தலைவர் பூமிநாதன், செயலாளர் யுவராஜ் மற்றும் வக்கீல்கள், அலுவலக பணியாளர்கள் கலந்து கொண்டனர்.*முதுகுளத்துார் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நடந்த தேசிய மக்கள் நீதிமன்றம் இரண்டு அமர்வாக சார்பு நீதிபதி ராஜகுமார், குற்றவியல் நீதித்துறை நீதிபதி அருண்சங்கர் தலைமையில் நடந்தது.