| ADDED : ஜூலை 13, 2024 08:43 PM
ராமநாதபுரம்:''தமிழகத்தில் ஊராட்சி செயலர்களுக்கு பாதுகாப்பற்ற நிலை இருப்பதால் அவர்களுக்கு அரசு கைத்துப்பாக்கி வழங்க வேண்டும்,'' என, தமிழ்நாடு ஊராட்சி செயலர்கள் சங்கத்தின் மாநிலத்தலைவர் ஜான்போஸ்கோ தெரிவித்தார்.ராமநாதபுரத்தில் நடந்த நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்ற அவர் கூறியதாவது:தமிழகத்தில் பணிபுரியும் ஊராட்சி செயலர்களுக்கு தேர்வு நிலை, சிறப்பு நிலை ஊதியம், கருவூலத்தால் ஊதியம் வழங்க வேண்டும். 10 ஆண்டுகள் பணிபுரிந்தவர்களுக்கு வட்டாரத்திற்குள் பணியிட மாறுதல் வழங்க வேண்டும். நுாறு நாள் வேலைத்திட்டத்தில் பணிபுரியும் ஊராட்சி செயலாளர்களுக்கு மாதம், 3,000 வழங்க வேண்டும். விடுப்பு விதிகள் பொருந்தும் வகையில் அரசாணை பிறப்பிக்க வேண்டும். 12,525 ஊராட்சிகளில் பணிபுரிவோரை ஓய்வூதியத் திட்டத்தில் இணைக்க வேண்டும்.இந்த கோரிக்கையை வலியுறுத்தி ஆக., 21ல் தற்செயல் விடுப்பு எடுத்து கலெக்டர் அலுவலகங்கள் முன் போராட்டம், செப்., 27ல் சென்னை ஊரக வளர்ச்சித்துறை இயக்குனர் அலுவலகம் முன் பெருந்திரள் முறையீடு போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.இரு தரப்பினரின் கருத்துகளை அறிந்து பணியிட மாறுதல் வழங்க வேண்டும். ஏற்கனவே ராமநாதபுரத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தின் போது ஊராட்சி செயலர்கள் பாதுகாப்புக்கு கைத்துப்பாக்கி வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தோம். ஊரக வளர்ச்சித்துறை இயக்குனரிடமும் அதைக்கேட்டு மனு கொடுத்துள்ளோம். அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.