| ADDED : ஜூலை 29, 2024 10:35 PM
நயினார்கோவில் : பரமக்குடி அருகே நயினார்கோவில் நாகநாத சுவாமி கோயில், சவுந்தர்ய நாயகி அம்பாள் ஆடிப்பூர திருக்கல்யாண திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.நயினார் கோவிலில் சவுந்தர்ய நாயகி அம்மன் தனி சன்னதியில் அருள்பாலிக்கிறார். இங்கு அம்மன் சன்னதியில் உள்ள பள்ளியறையில் இரவு 8:00 மணிக்கு பூஜைகள் நடக்கிறது.தொடர்ந்து ஆடிப்பூர திருக்கல்யாண விழாவில் காலை 6:30 மணிக்கு அம்மன் சன்னதி கொடிமரத்தில் சிவாச்சாரியார்கள் சிங்க கொடியை ஏற்றினர்.பின்னர் அபிஷேகம் நிறைவடைந்து கொடிமரம் மற்றும் அம்மனுக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. தினமும் அம்மன் காலை மற்றும் இரவு வெள்ளி பல்லக்கு உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் வீதி உலா வருகிறார். ஆக.6 காலை 8:00 மணிக்கு நான்கு மாட வீதிகளில் அம்மன் தேரோட்டம் நடக்கிறது. ஆக.8 காலை அம்மன் தபசு திருக்கோலம், மாலை சுவாமி, அம்மன் மாலை மாற்றுதல், இரவு பூப்பல்லக்கில் வீதி உலா நடக்கிறது. ஆக.9 காலை 9:00 முதல் 10:30 மணிக்குள் நாகநாத சுவாமி, சவுந்தர்ய நாயகி அம்மன் திருக்கல்யாண விழா நடக்கிறது. இரவு மின் தீப அலங்கார கோ ரதம் மற்றும் தென்னங்குருத்து சப்பரத்தில் திருமண கோலத்தில் சுவாமி, அம்மன் அருள் பாலிக்கின்றனர்.ஏற்பாடுகளை ராமநாதபுரம் சமஸ்தானம் தேவஸ்தானம் திவான் பழனிவேல் பாண்டியன், சரக பொறுப்பாளர் விக்னேஸ்வரன் மற்றும் அறநிலையத்துறை அதிகாரிகள் செய்துள்ளனர்.