| ADDED : ஏப் 30, 2024 11:36 PM
ராமநாதபுரம்:ராமநாதபுரம் சமஸ்தானத்திற்கு சொந்தமான திருப்புல்லாணி ஆதி ஜெகநாத பெருமாள் கோவிலில் பெருமாள் மற்றும் பத்மாசனி தாயாருக்கு அணிவிக்கப்படும் நகைகளில், 952 கிராம் எடையுள்ள 30 தங்க நகைகள், 1199 கிராம் எடையுள்ள 16 வெள்ளி நகைகளும் மாயமாகின. இதன் மதிப்பு 1 கோடி ரூபாய்.தற்போதைய திவான் பழனிவேல் பாண்டியன் அளித்த புகாரின் படி, ராமநாதபுரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் மேற்கண்ட நகை பொறுப்பாளரான கோவில் ஸ்தானிகர் சீனிவாசன் மீது வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.மாயமானதாக கூறப்படும் காலத்தில் பணியாற்றிய கோவில் ஊழியர்கள் ராமு, பாண்டி மற்றும் சாமித்துரை ஆகியோரிடம் விசாரித்தனர். தொடர்ச்சியாக முன்னாள் திவான் மகேந்திரனிடம் இரு முறை விசாரணை நடத்திஉள்ளனர். ராமநாதபுரம் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் சீனிவாசன் ஏற்கனவே தாக்கல் செய்த முன் ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.இந்நிலையில், இரண்டாவது முறையாக அதே நீதிமன்றத்தில் அவர் தாக்கல் செய்த முன் ஜாமின் மனு நேற்று விசாரணைக்கு வந்தது.சாட்சிகளை கலைப்பதற்கு வாய்ப்பு இருப்பதால், முன்ஜாமின் வழங்க அரசு வழக்கறிஞர் கார்த்திகேயன் எதிர்ப்பு தெரிவித்தார். கோவில் தரப்பில் திவான் பழனிவேல் பாண்டியனும் ஜாமின் வழங்க எதிர்ப்பு தெரிவித்ததால் சீனிவாசன் முன் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி குமரகுரு உத்தரவிட்டார்.