உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / காவிரியில் வெள்ளப்பெருக்கு: நதிகள் இணைப்பு திட்டம் செயல்படுத்தாததால் வீணாகும் உபரி நீர்

காவிரியில் வெள்ளப்பெருக்கு: நதிகள் இணைப்பு திட்டம் செயல்படுத்தாததால் வீணாகும் உபரி நீர்

ராமநாதபுரம்:தமிழகத்தில் ஏழு மாவட்டங்கள் பயனடையும் காவிரி--வைகை--குண்டாறு நதி நீர் இணைப்புத்திட்டத்தை செயல்படுத்தாததால்காவிரியில் உபரி வெள்ள நீர் வீணாக கடலில் கலக்கிறது.காவிரி- வைகை- குண்டாறு இணைப்பு திட்டப் பணியை ரூ.6941 கோடி மதிப்பீட்டில் 2021 பிப்.,19 ல் அப்போதைய முதல்வர் பழனிசாமி துவக்கி வைத்தார். இதற்காக ரூ.700 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதில் 11 கி.மீ.,க்கு கால்வாய் வெட்டுவதற்காக ரூ.331 கோடிக்கு ஒப்பந்தம் விடப்பட்டு பணிகள் துவங்கின. ஆனால் துவங்கிய நிலையிலேயே முடங்கியுள்ளது.* திட்டத்தின் பயன்கள்: காவிரி, வைகை, குண்டாறு இணைப்புத் திட்டத்தில் காவிரி ஆற்றில் வெள்ள காலங்களில் வீணாக கடலில் கலக்கும் 6300 மில்லியன் கன அடி நீர் ஆக்கபூர்வமாக தென் மாவட்டங்களுக்கு திருப்பி விடப்படுவதால் கரூர் மாவட்டத்தில் குளித்தலை, கிருஷ்ணராயபுரம் தாலுகாக்கள்,திருச்சி மாவட்டத்தில் திருச்சி, ஸ்ரீரங்கம் தாலுகாக்கள், புதுக்கோட்டை மாவட்டத்தில் புதுக்கோட்டை, கந்தர்வக்கோட்டை, கறம்பக்குடி, ஆலங்குடி, திருமயம், குளத்துார், அறந்தாங்கி, ஆவுடையார்கோவில் தாலுகாக்கள், சிவகங்கை மாவட்டத்தில் காரைக்குடி, தேவகோட்டை, திருப்பத்துார், சிவகங்கை, காளையார்கோவில், இளையான்குடி, மானாமதுரை தாலுகாக்கள், ராமநாதபுரம் மாவட்டத்தில் திருவாடானை, பரமக்குடி, கமுதி, கடலாடி, முதுகுளத்துார், ராமநாதபுரம் தாலுகாக்கள், விருதுநகர் மாவட்டம் திருச்சுழி, அருப்புக்கோட்டை, காரியாபட்டி தாலுகாக்கள், துாத்துக்குடி மாவட்டத்தில் விளாத்திகுளம் தாலுகா பயன் பெறும்.* மூன்று பிரிவுகளாக பணிகள்: கரூர் மாவட்டம் மாயனுார் கதவணையிலிருந்து புதுக்கோட்டை மாவட்டத்தில் பாயும் வெள்ளாறு வரை 118.5 கி.மீ., கால்வாய் வெட்டப்பட்டு திருச்சி, கரூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் உள்ள 342 ஏரிகளும், 42 ஆயிரத்து 170 ஏக்கர் நிலம் பாசனம் பெறும். வெள்ளாற்றுடன் இணைப்பது முதல் நிலை.புதுக்கோட்டை மாவட்டம் தெற்கு வெள்ளாற்றிலிருந்து 109 கி.மீ., நீளத்திற்கு கால்வாய் அமைத்து சிவகங்கை மாவட்டம் வைகை ஆற்றில் இணைப்பது. இதன் மூலம் புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் உள்ள 220 ஏரிகளும், 23 ஆயிரத்து 245 ஏக்கர் நிலம் பயனடையும். இது இரண்டாம் நிலை.விருதுநகர், ராமநாதபுரம் மாவட்டங்களில் 34 கி.மீ., நீளத்திற்கு கால்வாய் வெட்டி கிருதுமால் நதி, குண்டாற்றுடன் இணைத்து 492 ஏரிகளும், 44 ஆயிரத்து 547 ஏக்கர் பாசனம் பெறுவது மூன்றாம் நிலை. மொத்தத்தில் இத்திட்டத்தால் 1 லட்சத்து 9 ஆயிரத்து 962 ஏக்கர் நிலம் பாசனம் பெறும். * கடலில் வீணாகும் காவிரி நீர்:தற்போது காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. வினாடிக்கு ஒரு லட்சம் கன அடி நீருக்கு மேல் வெளியேற்றப்படுகிறது.இந்த நீர் வீணாக கடலுக்கு செல்லும் நிலை உள்ளது. இது போன்ற வெள்ளக்காலங்களில் பயன் பெறுவதற்காகத்தான் நதிகள் இணைப்புத்திட்டம் கொண்டு வரப்பட்டது. இதனை தி.மு.க., அரசு செயல்படுத்தவில்லை. தொடர்ந்து இரு விவசாய பட்ஜெட்டுகளிலும் காவிரி, வைகை, குண்டாறு இணைப்புத்திட்டத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்யவில்லை. இனி வரும் காலங்களிலாவது நதிகள் இணைப்பு திட்டத்திற்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்.இந்த மூன்று பிரிவுகளிலும் ஒரே நேரத்தில் பணிகளை துவக்கினால் தான் விரைவில் பணிகள் முடிந்து பயன்பாட்டிற்கு வரும். இது குறித்து தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.*வறண்ட பகுதிகள் வளம் பெறும்:காவிரி, கிருதுமால், வைகை , குண்டாறு பாசன விவசாயிகள் கூட்டமைப்பின் மாநில செயலாளர் ராமமுருகன் கூறியதாவது:காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வீணாக கடலில் கலக்கிறது. இது போன்ற வெள்ளக்காலங்களில் 7 மாவட்டங்கள் பயன் பெறும் திட்டம் தான் காவிரி, வைகை, குண்டாறு இணைப்புத்திட்டம். இத்திட்டத்தை செயல்படுத்தியிருந்தால் வெள்ள நீர் வீணாகாமல் வறண்ட பகுதிகள் வளம் பெறும்.இந்த திட்டத்தை 3 நிலைகளிலும் உடனடியாக பணியை துவக்க வேண்டும். 5 ஆண்டுகளாக முதல் நிலையில் 9 கி.மீ., மட்டுமே கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது. 261 கி.மீ., கால்வாயில் பணிகள் நிறைவு பெறுவது எப்போது. அரசு விரைவில் இது போன்ற திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை