| ADDED : ஆக 19, 2024 12:40 AM
திருப்புல்லாணி : திருப்புல்லாணி, ரெகுநாதபுரம் உள்ளிட்ட இடங்களில் சில ஓட்டல்களில் பயன்படுத்திய பிளாஸ்டிக் பச்சை, வெள்ளைத் தாள்களை உணவு பாதுகாப்பு துறையினர் பறிமுதல் செய்தனர்.திருப்புல்லாணி, ரெகுநாதபுரத்தில் உள்ள சில ஓட்டல்களில் காலை மற்றும் இரவு நேர டிபன்களில் பிளாஸ்டிக் தாள்கள் பயன்படுத்தப்படுவதாக மக்கள் புகார் தெரிவித்தனர். இதுகுறித்து ஆக.,16ல் தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக ராமநாதபுரம் உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் டாக்டர் விஜயகுமார் அறிவுறுத்தலின் பேரில் கீழக்கரை உணவு பாதுகாப்பு அலுவலர் ஜெயராஜ், திருப்புல்லாணி, ரெகுநாதபுரம் உள்ளிட்ட ஓட்டல்களில் ஆய்வு செய்தார்.அப்போது பிரிட்ஜில் பழைய பொரித்த சிக்கன், சாம்பார், சட்னி, சால்னா உள்ளிட்டவைகளை பிளாஸ்டிக் கவர்களில் கட்டி வைத்திருந்தனர். மேலும் பச்சை, வெள்ளை நிற பிளாஸ்டிக் தாள்கள் ஓட்டல்களில் அதிகளவு பயன்படுத்தியது தெரியவந்தது. அவற்றை கைப்பற்றி அழிக்கப்பட்டது. 4 கடைகளுக்கு ரூ.8000 அபராதம் விதித்து நோட்டீஸ் வழங்கியுள்ளனர்.