பா.ஜ.,விற்கு மக்கள் ஆதரவு பெருகுவதால் கையெழுத்து இயக்கத்தை தி.மு.க., தடுக்கிறது மாநில பொதுச்செயலாளர் குற்றச்சாட்டு
ராமநாதபுரம் : மத்திய அரசின் மும்மொழி கல்வி கொள்கைக்கு மக்கள் ஆதரவு பெருகியுள்ளதால் அச்சத்தில் பா.ஜ.,வின் கையெழுத்து இயக்கத்தை தி.மு.க.,வினர் தடுப்பதாக பா.ஜ., மாநிலப் பொதுச்செயலாளர் பொன்.பாலகணபதி குற்றம் சாட்டினார்.ராமநாதபுரத்தில் அவர் கூறியதாவது:மாநில தலைவர் அண்ணாமலை சமத்துவக் கல்வியை மையப்படுத்தி தமிழகத்தில் மும்மொழி கல்விக் கொள்கையை அமல்படுத்த வேண்டும் என கையெழுத்து இயக்கத்தை துவக்கி வைத்துள்ளார். 1 கோடி பேரிடம் கையெழுத்து வாங்கப்பட உள்ளது. நவோதயா பள்ளிகளை அதிகளவில் தமிழகத்தில் திறக்க மத்திய அரசு தயராக உள்ளது. ஆனால் தி.மு.க., அரசு தடையாக உள்ளது. ஏனெனில் அவர்கள் நடத்தும் சி.பி.எஸ்.இ., பள்ளிகளுக்கு வருமானம் குறைந்துவிடும் என அச்சப்படுகின்றனர்.சென்னையில் மும்மொழி கொள்கைக்கு ஆதரவாக கையெழுத்து இயக்கம் நடத்திய மூத்த தலைவர் தமிழிசையை கைது செய்துள்ளது கண்டனத்திற்குரியது. மும்மொழி கொள்கைக்கு மக்களிடம் ஆதரவு பெருகி வருவதால் தி.மு.க., அரசு பயத்தில் கையெழுத்து இயக்கத்தை தடுக்கிறது.ராமநாதபுரம் மாவட்டத்தில் 3 லட்சம் பேரிடம் கையெழுத்து பெற உள்ளோம். போலீசார் அனுமதி மறுத்தாலும் வீடுவீடாக சென்றும், டிஜிட்டல் முறையிலும் மும்மொழிகல்வி கொள்கைக்கு ஆதரவாக கையெழுத்து வாங்கப்படும். ராமநாதபுரத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது. பரமக்குடி வக்கீலுக்கு கொலை மிரட்டல் உள்ளது என உளவுத்துறை எச்சரித்தும் போலீசார் அலட்சியத்தால் அவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இதே போல கடலோரப்பகுதிகளில் கடத்தல் சம்பவங்கள் அதிகரித்துள்ளது.கஞ்சா, குட்கா போதைப்பொருட்கள் விற்பனை அதிகரித்துள்ளது. போலி மதுபாட்டில்கள் விற்கின்றனர். இவற்றை தடுக்க மாவட்ட நிர்வாகம், போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.