| ADDED : மே 18, 2024 04:43 AM
முதுகுளத்துார், : முதுகுளத்துார் ஒன்றியம் பொன்னக்கனேரி, தெய்வதானம் உட்பட 10க்கும் மேற்பட்ட கிராமங்களில் காவிரி குடிநீர் வராததால் தினந்தோறும் டிராக்டர் தண்ணீரை விலைக்கு வாங்கி பயன்படுத்தும் அவல நிலை உள்ளது.பொன்னக்கனேரி, செங்கற்படை, தெய்வதானம், மட்டியாரேந்தல் உட்பட 10க்கும் மேற்பட்ட கிராமங்களில் 2000 குடும்பங்கள் வசிக்கின்றனர். விவசாயம், கால்நடை வளர்ப்பு பிரதான தொழிலாக உள்ளது. முதுகுளத்துார் ஒன்றியத்திற்குட்பட்ட வளநாடு, செங்கற்படை உட்பட பல்வேறு கிராமங்களில் காவிரி குழாய் அமைக்கப்பட்டு பல மாதங்களாகியும் குடிநீர் வரவில்லை.ஒரு சில இடங்களில் காவிரி குழாய் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாகிறது. காவிரி குடிநீர் வராததால் 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள் விலைக்கு வாங்கி பயன்படுத்துகின்றனர். டிராக்டர் தண்ணீருக்காக தினந்தோறும் காத்திருக்கின்றனர். ஒன்றிய கவுன்சிலர் அர்ஜுனன் கூறியதாவது: முதுகுளத்துார் சுற்றியுள்ள கிராமங்களில் பல மாதங்களாக காவிரி குடிநீர் வரவில்லை. ஒரு சில இடங்களில் ஒரு சில நாள் வந்தாலும் அதற்கு பின் காவிரி குழாயில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாகிறது. தற்போது கோடை காலத்தில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் வேறு வழின்றி டிராக்டர் தண்ணீரை ரூ.12க்கு விலைக்கு வாங்கி பயன்படுத்துகின்றனர்.ஒரு சில நாட்கள் டிராக்டர் தண்ணீர் வராத நேரங்களில் அருகில் உள்ள ஊருணி தண்ணீரை அத்தியாவசிய தேவைக்கு பயன்படுத்தும் அவலநிலை உள்ளது. டிராக்டர் தண்ணீரை எதிர்பார்த்து இருப்பதால் விவசாயம், அத்தியாவசிய பணிக்கு செல்ல முடியவில்லை. இதுகுறித்து பலமுறை மனுக்கள் அளித்தும் நடவடிக்கை இல்லை. முதுகுளத்தூர் ஒன்றிய கவுன்சில் கூட்டத்தில் 10க்கும் மேற்பட்ட முறை மனுக்கள் அளிக்கப்பட்டும், விவாதங்கள் செய்தும் 15வது வார்டு புறக்கணிக்கப்படுகிறது. கலெக்டர் கிராமங்களில் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். கிராம மக்கள் டிராக்டர் தண்ணீரை நம்பி வாழும் நிலை ஏற்பட்டுள்ளது என்றார்.