| ADDED : மே 13, 2024 12:15 AM
பரமக்குடி : பரமக்குடி எமனேஸ்வரம் சவுராஷ்டிரா சபைக்கு பாத்தியமான பெருந்தேவி, வரதராஜ பெருமாள் கோயில் வைகாசி பிரம்மோற்ஸவ கொடியேற்றம் நடந்தது.எமனேஸ்வரம் வரதராஜ பெருமாள் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் வைகாசி பிரம்மோற்ஸவ விழா மற்றும் வசந்தோற்ஸவம் நடப்பது வழக்கம். இதன்படி நேற்று காலை கோயில் கொடி மரத்தில் 10:00 மணிக்கு கருட கொடி ஏற்றப்பட்டது. இரவு 7:00 மணிக்கு அன்ன வாகனத்தில் பெருமாள் ஏகாந்த சேவையில் வீதி வலம் வந்தார். தினமும் காலையில் பல்லக்கில் பல்வேறு அவதாரங்களில் வீதி உலா வருகிறார். தொடர்ந்து மாலை சிம்மம், சேஷ வாகனம், கருடன், அனுமன், யானை உள்ளிட்ட வாகனங்களில் அருள்பாலிக்க உள்ளார்.மே 18 காலை 11:00 மணிக்கு மேல் ஸ்ரீதேவி, பூதேவி வரதராஜ பெருமாளுக்கு திருக்கல்யாணம் நடக்க உள்ளது. மறுநாள் வெண்ணைத்தாழி நவநீதகிருஷ்ணன் சேவை, அதனைத் தொடர்ந்து குதிரை வாகனத்தில் திருமங்கை ஆழ்வார் வேடு பரியாகம் நடக்கிறது. மே 20 மாலை ரத வீதிகளில் தேரோட்டம், மறுநாள் தீர்த்தவாரி மற்றும் கொடி இறக்கத்துடன் விழா நிறைவடையும். இதே போல் வைகாசி வசந்தோற்ஸவ விழா மே 22 காலை துவங்குகிறது. மே 23 அதிகாலை 5:00 மணிக்கு வரதராஜ பெருமாள் கள்ளழகர் திருக்கோலத்தில் வைகை ஆற்றில் சேவை சாதிக்கிறார். ஏற்பாடுகளை எமனேஸ்வரம் சவுராஷ்டிரா சபையினர் செய்துள்ளனர்.