இலவச வீட்டுமனை பட்டா குருவிக்காரர்கள் கோரிக்கை
திருவாடானை, : தொண்டி அருகே தீர்த்தாண்டதானத்தில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்க குருவிக்காரர் குடும்பத்தினர் வலியுறுத்தினர். தொண்டி அருகே தீர்த்தாண்டதானத்தில் 16 குருவிக்காரர் குடும்பத்தினர் வசிக்கின்றனர். இவர்கள் இலவச வீட்டுமனை கேட்டு ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர். விசாரணை செய்த அதிகாரிகள் திருவாடானை அருகே உள்ள திருவெற்றியூரில் இலவச பட்டா வழங்கினர். குருவிக்காரர் குடும்பத்தை சேர்ந்த தொண்டீஸ்வரன் கூறியதாவது:தொண்டி அருகே தீர்த்தாண்டதானத்தில் ஐந்து தலைமுறையாக வசிக்கிறோம். ஆரம்பத்தில் மூன்று குடும்பமாக இருந்து தற்போது 16 குடும்பத்தினர் வசிக்கிறோம். அனைவரும் கூலி வேலை செய்து பிழைப்பு நடத்துகிறோம். எங்களுக்கு தீர்த்தாண்டதானத்தில் இலவச வீட்டுமனைப் பட்டா வழங்க வேண்டும் என்று மனு கொடுத்தோம்.ஆனால் அதிகாரிகள் திருவாடானை அருகே திருவெற்றியூரில் வழங்கினர். எங்களது பூர்வீகம் தீர்த்தாண்டதானம். இங்கு வழங்காமல் 40 கி.மீ.,ல் திருவெற்றியூரில் வழங்கபட்டதால் அங்கு தங்கியிருந்து பிழைப்பு நடத்த முடியாது. எங்கள் குழந்தைகள் சோழகன்பேட்டை, தீர்த்தாண்டதானம் அரசு பள்ளிகளில் படிக்கின்றனர். ஆகவே எங்களது வாழ்வாதாரம் கருதி தீர்த்தாண்டதானத்தில் வீட்டுமனைப் பட்டா வழங்க வேண்டும் என்றனர்.