உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / பரமக்குடியில் பயனற்ற சுகாதார வளாகங்கள் துாய்மை திட்டம் கேள்விக்குறி

பரமக்குடியில் பயனற்ற சுகாதார வளாகங்கள் துாய்மை திட்டம் கேள்விக்குறி

பரமக்குடி, - பரமக்குடி நகராட்சி பகுதியில் சுகாதார வளாகங்கள் செயல்படாத நிலையில் துாய்மை இந்தியா திட்டம் கேள்விக்குறியாகி வருகிறது.பரமக்குடி நகராட்சிக்கு உட்பட்ட 36 வார்டுகளில் சுகாதார வளாகங்கள் அமைக்கப்பட்டன. துாய்மை இந்தியா திட்டத்தின் அடிப்படையில் பல இடங்களில் புதிய வளாகங்கள் கடந்த ஆண்டுகளில் கட்டப்பட்டது.பெருமாள் கோயில் படித்துறை, பஞ்சமுக அனுமன் கோயில், காட்டுப் பரமக்குடி மற்றும் பரமக்குடி, எமனேஸ்வரம் உள்ளிட்ட நகர் பகுதிகளில் 15க்கும் மேற்பட்ட சுகாதார வளாகங்கள் செயல்படாத நிலை உள்ளது.ஒவ்வொரு வீடுகளிலும் தனிநபர் கழிப்பறை அவசியம் என்பதை மத்திய அரசு கட்டாயப்படுத்தி வருகிறது. இதற்காக நிதி ஒதுக்கி மானியங்கள் வழங்கப்பட்டு கழிப்பறைகளை கட்ட ஊக்கப்படுத்தி வருகின்றனர்.ஆனால் நகராட்சி சார்பில் கட்டப்பட்ட சுகாதார வளாகங்கள் பல சேதமடைந்து பராமரிக்கப்படாமல் பூட்டி வைத்துள்ளனர். இதே போல் தண்ணீர் பிரச்னை மற்றும் கழிவு நீர் செல்ல முறையான வழியின்றி அடைக்கப்பட்டுள்ளது.இதனால் தினந்தோறும் பரமக்குடி நகருக்கு தொழில் சார்ந்து வரும் பல ஆயிரம் மக்கள் சுகாதார வளாகங்கள் இன்றி தவிக்கின்றனர். மேலும் இயற்கை உபாதைகளுக்கு வைகை ஆறு உள்ளிட்ட நீர் நிலைகளை பயன்படுத்தும் சூழல் மீண்டும் அதிகரித்து வருகிறது.ஆகவே துாய்மை இந்தியா திட்டத்தை முறைப்படுத்த சுகாதார வளாகங்களை உடனடியாக சீரமைக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்