| ADDED : மே 11, 2024 10:19 PM
ராமநாதபுரம்:-ராமநாதபுரம் மாவட்டத்தில் 69 தனியார் பள்ளிகளில் உள்ள 549 பள்ளி வாகனங்களின்பாதுகாப்பு அம்சங்கள் குறித்து எஸ்.பி., சந்தீஷ் ஆய்வு செய்தார். இதில் நேற்று முதல் நாளில் மட்டும் 24 வாகனங்களின் தகுதிச்சான்று தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டது.தமிழ்நாடு அரசுப் பள்ளி வாகன சிறப்பு விதி 2012ன்படி ஆண்டுக்கு ஒருமுறை வருவாய்த்துறை, போலீஸ் துறை, பள்ளிக்கல்வித்துறை, போக்குவரத்துத்துறைஆகியோர் இணைந்து பள்ளி வாகனங்களை கூட்டாய்வு செய்து பாதுகாப்பு விதிமுறைகள் கடைப்பிடிக்கப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்த பின் வாகனங்கள் பள்ளிகளில் இயக்கப்படும். நேற்று இதற்கான கூட்டாய்வு நடந்தது. இதில்சந்தீஷ் எஸ்.பி., தலைமையில் வட்டார போக்குவரத்து அலுவலர் ேஷக் முகமது முன்னிலையில் வாகனத்தின் உறுதி, டயர்கள், உட்புற தரைதளம், வாகன இருக்கைகள், வாகனத்தின் அவசர கால கதவு, படிக்கட்டுகள், வாகனத்தின் பிரேக் திறன், தீயணைப்புக்கருவி, முதலுதவி பெட்டிகள், மருந்துகள் குறித்தும், கேமரா நல்ல நிலையில் இயங்குகிறதா என சோதிக்கப்பட்டது.இந்த சோதனையில் குறைபாடுள்ள 24 பள்ளி வாகனங்களின் தகுதிசான்று தற்காலிகமாக ரத்துசெய்யப்பட்டது. சீர் செய்த பின் வாகனம் இயக்க அனுமதி வழங்கப்படும். பள்ளி வாகனங்கள் நகர எல்லைக்குள் 40 கி.மீ., வேகத்திலும், பிற வாகனங்கள் அனுமதிக்கப்பட்ட சாலைகளில் 50 கி.மீ., மிகாமல் இயக்க வேண்டும் என டிரைவர்கள், கண்டக்டர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.