உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / சாயல்குடி கண்மாயில் வண்டல் எடுப்பதில் முறைகேடு நடக்காமல் தடுக்க வேண்டும்

சாயல்குடி கண்மாயில் வண்டல் எடுப்பதில் முறைகேடு நடக்காமல் தடுக்க வேண்டும்

சாயல்குடி: ராமநாதபுரம் கலெக்டர், கனிமவளத்துறையினர், வருவாய்த்துறையினர், போலீசார் உள்ளிட்டோர் கண்மாயில் வண்டல் மண் எடுப்பதில் முறைகேடு நடக்காமல் தடுக்க உரிய ஆய்வு செய்ய வேண்டும் என இயற்கை ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்தனர்.ஒவ்வொரு ஆண்டும் விவசாய நிலங்களை சமப்படுத்தும் வகையிலும், மண்பாண்ட தொழில் பயன்பாட்டிற்காகவும் வண்டல் மண் எடுக்க கனிம வளம் மற்றும் வருவாய் துறை அனுமதி அளிக்கிறது. பெரும்பாலும் மண்பாண்ட தொழில் நலவடைந்து போனதால் அவர்கள் பெயரைச் சொல்லியும், வயல் வெளியில் மண் மேவுவதற்கு பதில் தனிநபர்கள் மற்றும் ரியல் எஸ்டேட் இடங்களில் தான் மண் அடிப்பது வாடிக்கையாக நடக்கிறது.சாயல்குடி பெரிய கண்மாய் 511 ஏக்கர் கொண்டது. இக்கண்மாயில் அனுமதிக்கப்பட்ட அளவைவிட ஆழத்தில் மண் எடுத்து விற்பனை செய்தது சம்பந்தமாக அனுமதி பெற்றவர்களுக்கு இடையே போட்டி தகராறு ஏற்பட்டதில் பாதியில் நிறுத்தப்பட்டது. அதற்கு முன்பே சுக்காம்பாறை தெரியும் அளவிற்கு சுமார் 7 அடி முதல் 10 அடி ஆழம் வரை மண் எடுத்து விற்பனை செய்துள்ளனர். இதனால் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறையும். இந்நிலையில் நடப்பு ஆண்டில் சாயல்குடி பெரிய கண்மாயில் மண் எடுக்க அனுமதி பெற்றுஉள்ளதாகவும் கடந்த ஆண்டு மண் எடுத்த சில இடங்களில் இன்னமும் நீர் தேங்கியுள்ளதால் கண்மாய் கிழக்கு பகுதியில் செம்மண் வளம் நிறைந்த பகுதியில் மண் எடுக்க உள்ளனர்.சாயல்குடி அருகே சண்முக குமாரபுரம் விவசாயி முனியசாமி கூறியதாவது:பட்டா உள்ள விவசாய நிலங்களுக்கும், மண்பாண்ட தொழில் செய்யும் தொழிலாளர்களுக்கு மட்டுமே மேற்கண்ட இடங்களில் இருந்து மண் எடுத்துச் செல்வதை கனிம வளம் மற்றும் வருவாய் துறை, போலீசார் உறுதி செய்ய வேண்டும். மேலும் அனுமதிக்கப்பட்ட அளவைவிட மண் எடுப்பதில் கடந்த ஆண்டு பிரச்னை ஏற்பட்டது போல நடப்பாண்டிலும் பிரச்னை ஏற்படாமல் தடுக்கவும், கரையோரம் ஆழப்படுத்தும் வகையில் மண்ணெடுக்கவும் கரையிலுள்ள சீமை கருவேலம்மரங்களை முற்றிலும் அகற்றவும் வேண்டும். சேதமடைந்த கரையோரப் பகுதிகளை பலப்படுத்தும் விதமாக நடவடிக்கை அமைய வேண்டும். மண் எடுக்கவும் லாப நோக்கோடு தனிநபர்கள் மற்றும் ரியல் எஸ்டேட் விற்பனை இடத்திற்கு முறைகேடாக மண் விற்பனை செய்வதை ஆரம்பத்திலேயே தடுக்க வேண்டும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை