| ADDED : ஜூலை 12, 2024 04:19 AM
முதுகுளத்துார்: முதுகுளத்துார் அருகே கீழச்சாக்குளம் கிராமத்தில் மழை பெய்து விவசாயம் செழிக்க வேண்டி 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை நிறைகுளத்து அய்யனார் கோயில் குதிரை எடுப்பு, பொங்கல் விழா நடந்தது. முதுகுளத்துாரில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு பிடிமண் வழங்கப்பட்டது. பக்தர்கள் காப்புக்கட்டிவிரதம் இருந்தனர். தினமும் அய்யனாருக்கு பூஜை நடந்தது. முதுகுளத்துார் அய்யனார் கோயிலில் இருந்து மண்ணால் செய்த கருப்பணசாமி, பைரவர், குதிரைகள், தவழும் பிள்ளைகள் பக்தர்கள் 4 கி.மீ., ஊர்வலமாக கீழச்சாக்குளம் கிராமத்திற்கு கொண்டு சென்றனர்.கடந்தாண்டு விளைந்த தானியங்கள் வைத்து பூஜை மற்றும் கண் திறப்பு செய்யப்பட்டது.கிராமத்தின் முக்கிய வீதியில் உலா வந்து நிறைகுளத்து அய்யனார் கோயிலில் சிறப்பு பூஜை செய்தனர். மக்கள் பொங்கலிட்டு நேர்த்திக்கடன் செலுத்தினர். பக்தர்கள் பலர் பங்கேற்றனர். வள்ளி திருமணம் நாடகம் நடந்தது.