| ADDED : ஜூன் 14, 2024 04:29 AM
ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் சோழந்துார் அருகே முள்ளிக்குடி பகுதியில் ஆக்கிரமிப்பில் உள்ள மூன்று ஏக்கர் புறம்போக்கு நிலத்தை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிச்சங்குறிச்சி ஊராட்சி தலைவர் நாகமுத்து கலெக்டர் விஷ்ணு சந்திரனிடம் மனு அளித்தார்.ஆர்.எஸ்.மங்கலம் ஒன்றியம் பிச்சங்குறிச்சி ஊராட்சி தலைவர் நாகமுத்து கலெக்டரிடம் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது; ஆர்.எஸ்.மங்கலம் தாலுகா, சீனாங்குடி வருவாய் கிராமத்திற்கு உட்பட்ட முள்ளிக்குடி கிராமத்தில் சுமார் 3 ஏக்கர் அரசு புறம்போக்கு நிலம் உள்ளது. இந்த இடத்தில் சில குடும்பங்கள் பல நாட்களாக வசிக்கின்றனர். இதில் சிலர் 15 முதல் 20 சென்ட் வரை இடத்தை ஆக்கிரமித்துள்ளனர்.இதனால், ஊராட்சிக்கு தேவையான ஊரணி மகளிர் மன்ற கட்டடம், பழத் தோட்டம், அங்கன்வாடி கட்டடம் உள்ளிட்ட நலத்திட்டங்களுக்கான பணிகளுக்கு இடம் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.புறம்போக்கு இடத்தில் நீண்ட நாட்களாக வசித்து வரும் தகுதியானவர்களுக்கு பட்டா வழங்க நடவடிக்கை எடுப்பதுடன், கூடுதல் இடங்களை ஆக்கிரமித்துள்ள ஆக்கிரம்புகளை அகற்றி புறம்போக்கு இடத்தை மீட்டு தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என அம்மனுவில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.