பரமக்குடி நகராட்சி குப்பை ஆங்காங்கே ரோட்டில் குவிப்பு குடியிருப்போர் குமுறல்
பரமக்குடி: பரமக்குடி நகராட்சி பகுதி வீடுகளில் இருந்து கொண்டு செல்லப்படும் குப்பை தெருக்களில் ஆங்காங்கே கொட்டி அள்ளப்படுவதால் குடியிருப்போர் குமுறலில் உள்ளனர்.பரமக்குடி நகராட்சியில் 36 வார்டுகள் இருக்கிறது. கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக தானியங்கி குப்பை வாகனங்கள் செயல்பாடு நிறுத்தப்பட்டது.இதனால் தெருக்களில் எங்கும் குப்பைத் தொட்டிகள் இல்லாத நிலை உள்ளது. பரமக்குடி நகராட்சியை துாய்மைப்படுத்தும் நோக்கில் ஒவ்வொரு வீடுகளிலும் மக்கும், மக்காத குப்பை என பிரித்து வைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.தினந்தோறும் நகராட்சி ஊழியர்கள் பேட்டரி வாகனம் அல்லது தள்ளு வண்டிகளில் வந்து வீடுகள் தோறும் குப்பை பெறுகின்றனர். இவற்றை முறையாக சேமித்து கொண்டு செல்ல வாகன வசதி குறைந்த அளவே உள்ளது.இதனால் ஒவ்வொரு ஊழியரும் அதிகப்படியான குப்பையை வாகனத்தில் ஏற்ற முடியாமல் இருக்கிறது. வீடுகளில் பெறப்படும் குப்பையை ஒவ்வொரு தெருக்களிலும் ஆங்காங்கே மூடை மூடையாக கட்டிக் குவித்து வைக்கின்றனர்.இவற்றை கால்நடைகள், நாய்கள் சாப்பிட நேர்வதால் தெரு முழுவதும் பரவுகிறது. இதனால் தினம் தினம் அந்தப்பகுதி குடியிருப்போர் துர்நாற்றம் மற்றும் சுகாதாரக் கேட்டால் குமுறலில் உள்ளனர்.துாய்மை இந்தியா திட்டத்தை செயல்படுத்தும் நோக்கில் ஒவ்வொரு வீடு மற்றும் கடைகளிலும் குப்பை சேகரித்து கொடுக்கின்றனர். ஆகவே நகராட்சி நிர்வாகம் குப்பையை உடனுக்குடன் அப்புறப்படுத்த வாகன வசதிகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.