| ADDED : ஜூன் 01, 2024 04:16 AM
சாயல்குடி: தற்போது நவீன அலைபேசிகளின் வரவால் புகைப்பட தொழில் நாளுக்கு நாள் நலிவடைவதாக புகைப்பட கலைஞர்கள் வேதனை தெரிவித்தனர்.திருமணம், காதணி விழா, பூப்புனித நீராட்டு விழா, கோயில் விழாக்கள் மற்றும் சுப நிகழ்ச்சிகள் அனைத்திற்கும் வீடியோ மற்றும் போட்டோ எடுப்பது காலம்காலமாக நடந்து வரும் நிகழ்வாகும். தற்போதைய நவீன ஐபோன் மற்றும் அலைபேசியின் தாக்கத்தால் பெரும்பாலானோர் புகைப்பட கலைஞர்களை அழைக்காமல் தாங்களாகவே போட்டோக்களை எடுத்து அதனை ஆல்பமாக தயார் செய்யும் போக்கு அதிகரித்துள்ளது.சாயல்குடியை சேர்ந்த போட்டோகிராபர் சத்தியமூர்த்தி, மலை முருகன் கூறியதாவது:பொதுவாக திருமணம்உள்ளிட்ட விசேஷ நிகழ்ச்சிகளுக்கு ஒரு ரோல் 35 எண்ணிக்கையில் போட்டோ எடுப்பதற்கு ரூ.2000 தொகை பெறப்படுகிறது. போட்டோக்களின் எண்ணிக்கைக்கு தகுந்தவாறு கணக்கிட்டு ஆல்பங்கள் தயார் செய்கிறோம்.நிகழ்ச்சிக்கு ஏற்றவாறு ரூ.5000 முதல் ரூ.10 ஆயிரம் வரை வீடியோ சிடி மற்றும் பென்டிரைவ்வழங்கப்படுகிறது. நவீன அலைபேசிகளின் தாக்கத்தால் பெரும்பாலானோர் தாங்களாகவே போட்டோ மற்றும் வீடியோக்களை பதிவேற்றம் செய்து அதனை நேரடியாக மதுரை, கோவை, திருச்சி, சென்னை உள்ளிட்ட நகரங்களுக்கு அனுப்பி ஆல்பம், பென் டிரைவ் பெற்றுக் கொள்கின்றனர்.இதனை நம்பியுள்ள ஏராளமான புகைப்பட கலைஞர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாக உள்ளது. கடை வாடகை, பணியாளர்களுக்கு சம்பளம் உள்ளிட்ட இதர செலவுகளுக்கு அன்றாடம்திண்டாடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்.ஆடி மற்றும் சித்திரை மாதங்களில் பெரும்பாலும் விழா இருக்காது.எனவே புகைப்பட கலைஞர்களின் நிலை அறிந்து விழா நடத்துபவர்கள் எங்களை முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அரசு உரிய முறையில் கடன் வழங்க வேண்டும் என்றனர்.