கருவூல அலுவலகத்தில் பெயர்ந்து விழும் கூரை அச்சத்தில் பொதுமக்கள்
ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் மாவட்ட கருவூல அலுவலக கட்டடத்தின் மேல் தளம் சிமென்ட் கூரை பெயர்ந்து விழுவதால் விபத்து அபாயம் உள்ளதாக மக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.பட்டணம்காத்தான் ஊராட்சி சேதுபதி நகரில் உள்ள புதிய கலெக்டர் அலுவலகம் எதிரில் உள்ள மாவட்ட கருவூலம் அலுவலக கட்டட வளாகத்தில் சமூக பாதுகாப்பு திட்டம், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர், தபால் அலுவலகம், தமிழ் வளர்ச்சித்துறை உள்ளிட்ட பல்வேறு துறை அலுவலகங்கள் செயல்படுகின்றன. தினமும் ஏராளமான பொதுமக்கள், அலுவலர்கள் வந்து செல்கின்றனர்.இந்நிலையில் கருவூலக கட்டடம் தொடர் பராமரிப்பு இல்லாமல் மேல் தளத்தில் சிமென்ட் கூரை பெயர்ந்து கீழே விழுவது வாடிக்கையாகியுள்ளது. இனிவரும் மழைக்காலத்தில் விரிசல் ஏற்பட்டு அதிகளவில் கூரை பெயர்ந்து விழ வாய்ப்பு உள்ளது.எனவே விபத்து ஏற்படுவற்குள் சேதமடைந்த கட்டடத்தின் கூரையை சீரமைக்க வேண்டும். அதற்கு கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் உத்தரவிட வேண்டும்.