கூடுதல் வகுப்பறை கட்டித்தர கோரிக்கை
ராமநாதபுரம்; மண்டபம் ஒன்றியம் இருமேனி ஊராட்சி குப்பாணி வலசை ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளிக்கு கூடுதல் வகுப்பறை கட்டடம் கட்டித்தர வேண்டும் என மக்கள் வலியுறுத்தினர்.குப்பாணிவலசையில் உள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி மேலாண்மை குழுவினர் ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர். அதில், மரவெட்டி வலசை, குப்பாணி வலசை, சாலைவலசை, காளீஸ்வரிநகர், குணாநகர், பசும்பொன்நகர் ஆகிய இடங்களை சேர்ந்த மாணவர்கள் பள்ளியில் படிக்கின்றனர். 1 முதல் 5ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு இரு சிறிய அறை கொண்ட வகுப்பறை போதுமானதாக இல்லை.போதிய வகுப்பறை வசதியின்றி மாணவர்கள் சிரமப்படுகின்றனர். எனவே பள்ளி வளாகத்தில் கூடுதலாக வகுப்பறை கட்டடம் கட்டித்தர வேண்டும். அதற்கு கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தினர்.