கலெக்டர் அலுவலகத்தில் பட்டுப்போன மரங்களை அகற்ற கோரிக்கை
ராமநாதபுரம் : ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் பராமரிப்பு இல்லாததால் காய்ந்து பட்டுப்போன மரங்கள் பலத்த காற்று மழையின் போது கீழே விழுந்து பல மாதங்களாக அகற்றப்படாமல் உள்ளன. அவற்றை அகற்றிவிட்டு புதிய மரக்கன்றுகள் நடுவதற்கு வனத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக வளாகத்தை சுற்றிலும் வனத்துறை சார்பில் சவுக்கு, நாவல், புங்கன், புளி என நுாற்றுக்கணக்கான மரங்கள் உள்ளன. இவை போதிய தண்ணீர், பராமரிப்பு இல்லாததால் வளர்ச்சி பாதிக்கப்பட்டு பட்டுபோய் காய்ந்துள்ளதால் பலத்த காற்று, மழையின் போது வேருடன் சாய்ந்து ஏராளமான மரங்கள் விழுந்து கிடக்கின்றன. இவை பல மாதங்களாக அகற்றப்படாமல் அப்படியே உள்ளன. இதனை வனத்துறையினரும், வருவாய்துறையினரும் கண்டுகொள்ளாமல் உள்ளனர். சில மரங்கள் காய்ந்து இலைகள் உதிர்ந்து எப்போது வேண்டுமானலும் சாய்ந்து விழும் நிலையில் உள்ளன. எனவே விழுந்து கிடக்கும் ரூ. பல ஆயிரம் மதிப்புள்ள மரங்களை முறைப்படி ஏலம் விட்டு அகற்ற வேண்டும். அவற்றிற்கு பதிலாக புதிதாக கூடுதலாக மரக்கன்றுகள் நடுவதற்கும், வருவாய்துறை, வனத்துறையினர் இணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்கு கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் உத்தரவிட வேண்டும் என மக்கள் வலியுறுத்தினர்.