| ADDED : மே 28, 2024 05:26 AM
திருவாடானை : திருவாடானை, தொண்டி பகுதியில் தேங்கியுள்ள தண்ணீரில் ஈக்கள் மற்றும் கொசுக்கள் அதிகமாக உற்பத்தியாகிறது. இவை குடிநீர், தின்பண்டங்கள், உணவு வகைகள் மீது அதிகம் காணப்படுகிறது.திருவாடானை, தொண்டி, நம்புதாளை, எஸ்.பி.பட்டினம், சின்னக்கீரமங்கலம் பகுதியில் சில ஓட்டல்கள், தள்ளுவண்டி கடை களில் உணவு பொட்டலங்களை சாப்பிட்டு வெளியே வீசுவதாலும், பேக்கரிகள் மற்றும் டீக்கடைகளில் டீ மற்றும் காபி குடித்து விட்டு பிளாஸ்டிக் டம்ளர்களை அந்த இடத்திலேயே விட்டுச் செல்வதால் ஈக்கள் அதிகம் வருகின்றன. இங்கு உணவு உட்கொள்வதால் நோய்கள் பரவும் நிலை ஏற்பட்டுள்ளது. தள்ளுவண்டிகளில் விற்பனை செய்யும் உணவு வகைகளை பாதுகாக்கும் பொருட்டு நான்கு பக்கமும் கண்ணாடி தடுப்புகள் அமைக்கவும், ஓட்டல்களில் வலை அமைக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.இது குறித்து மக்கள் கூறுகையில், கோடை மழையால் ஆங்காங்கே தண்ணீர் தேங்கியுள்ளது. சமீப நாட்களாக ஈ மற்றும் கொசுக்கள் அதிகமாக உற்பத்தியாகி வருகிறது. நோய்கள் பரவும் அபாயம் இருப்பதால் சுகாதாரத்துறையினர் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.