| ADDED : ஜூலை 12, 2024 11:14 PM
ராமநாதபுரம்:ராமேஸ்வரம் கோவிலில் ஊழியர்களின் சேம நல நிதியில், ஒரு கோடி ரூபாய் வரை மோசடி செய்த வழக்கில் முன்னாள் இணை ஆணையர் உட்பட இருவர் நேற்று ஆஜராகினர். வழக்கை ஆக., 2க்கு தள்ளி வைத்து மாஜிஸ்திரேட் நிலவேஸ்வரன் உத்தரவிட்டார். இந்த மோசடி வழக்கில் கோவில் தற்காலிக கம்ப்யூட்டர் ஆப்பரேட்டர் சிவன் அருள்குமரன், கணக்கர் ரவீந்திரன் மீது ராமநாதபுரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். 2020ல் உயர்நீதிமன்ற மதுரை கிளை சி.பி.சி.ஐ.டி., போலீசார் விசாரணைக்கு உத்தரவிட்டது. விசாரணையில் ராமநாதபுரம் கரூர் வைஸ்யா வங்கியில் கோவில் பெயரில் நன்கொடைக்காக அனுமதியின்றி கணக்கு துவங்கி மோசடி செய்ததும், கணக்கு துவங்க முன்னாள் இணை ஆணையர் செல்வராஜ் கையெழுத்திட்டதும் தெரிய வந்தது. மேலும், சிவன்அருள் குமரன் தன் தந்தை வங்கி கணக்கிற்கு பண பரிமாற்றம் செய்ததும் தெரிய வந்தது. இதையடுத்து சி.பி.சி.ஐ.டி போலீசார் சிவன்அருள் குமரன், அவரது தந்தை கோபால், கணக்கர் ரவீந்திரன், முன்னாள் இணை ஆணையர் செல்வராஜ் ஆகியோர் மீது வழக்குப்பதிந்தனர்.போலீசார், குற்றப்பத்திரிக்கை தயார் செய்து ராமநாதபுரம் நீதித்துறை நடுவர் எண் 2ல் தாக்கல் செய்தனர். இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. இதில் சிவன்அருள் குமரன், கோபால் ஆஜராகவில்லை. செல்வராஜ், ரவீந்திரன் ஆகியோர் ஆஜராகினர். வழக்கை விசாரித்த ஆக., 2க்கு ஒத்திவைத்து மாஜிஸ்திரேட் நிலவேஸ்வரன் உத்தரவிட்டார்.