மீட்டிங் நடத்துவதில் காட்டும் ஆர்வத்தை மக்களின் கோரிக்கைகளிலும் காட்டுங்க பெயரளவில் புள்ளி விபரங்கள்
கடலாடி : கடலாடி மற்றும் திருப்புல்லாணி ஒன்றியத்திற்கு உட்பட்ட 93 கிராம ஊராட்சிகளிலும் பொதுமக்கள் கோரிக்கைகளை நிவர்த்தி செய்யும் பணிகளில் யூனியன் நிர்வாகத்தினர் உள்ளனர்குடிநீர், மின்சாரம், சுகாதாரம், சாலை வசதி மற்றும் பொதுமக்களின் அத்தியாவசிய பொதுநல பிரச்னைகளை சரி செய்வதற்கும், தீர்வு காணவும் அதிகாரிகளின் ஒத்துழைப்பு அவசிய தேவையாக உள்ளது. இந்நிலையில் கடலாடி மற்றும் திருப்புல்லாணி, கீழக்கரை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள அரசுத் துறை சார்ந்த அலுவலர்கள் உரிய முறையில் பொதுமக்களின் கோரிக்கைகளுக்கு செவிசாய்க்க வேண்டும்.இப்பகுதிகளின் பிரதிநிதியாக செல்லக்கூடிய அலுவலர்கள் கலெக்டர் அலுவலகத்தில் நடக்கும் வளர்ச்சி திட்ட பணிகளில் அமைச்சர், எம்.எல்.ஏ., எம்.பி., மற்றும் அரசுத் துறை உயர் அதிகாரிகளின் ஆய்வு கூட்டங்களுக்கு வருகின்றனர். அறிக்கைகள் மற்றும் புள்ளி விவரங்களை சமர்ப்பிப்பதற்கான கூட்டங்களுக்கு அதிகளவு அதிகாரிகள் முக்கியத்துவம் தருகின்றனர்.மக்கள் கூறியதாவது: அரசின் திட்டங்களை செயல்படுத்தும் நிலையில் அலுவலர்கள் உள்ளனர். முன்பு கிராமங்களில் ஊராட்சி நிர்வாகம் மூலம் குறைகள் தீர்க்கப்பட்டன. தற்போது ஊராட்சி தலைவர்களின் பதவிக்காலம் நிறைவடைந்த நிலையில் பொதுமக்களின் அத்தியாவசிய பிரச்னைகளுக்கு தனி அலுவலர்கள் பங்களிப்பு அவசியமாகிறது.அரசு கேட்கக் கூடிய புள்ளி விவரங்களை தாக்கல் செய்வதற்கு அதிக ஆர்வம் காட்டும் அதிகாரிகள் கிராமப்புறங்களில் நிகழக்கூடிய அத்தியாவசிய பிரச்னைகளுக்கும் தீர்வு காணவும் முன்வர வேண்டும் என தெரிவித்தனர்.