| ADDED : ஆக 21, 2024 08:54 AM
சாயல்குடி : -விவசாயம் மற்றும் குடிநீர் இடங்களில் உப்பளம் அமைப்பதை தடுத்து நிறுத்தக் கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் சாயல்குடி மூக்கையூர் ரோட்டில் நடந்தது.விவசாய சங்கத்தின் தாலுகா தலைவர் செல்வராஜ் தலைமை வகித்தார். தாலுகா செயலாளர் முருகேசன் முன்னிலை வகித்தார்.பொருளாளர் செவல்பட்டி அந்தோணி, உறைகிணறு செல்வராஜ், மாநில நிர்வாகக் குழு உறுப்பினர் கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட தலைவர் ஜீவா, மாவட்ட செயலாளர் கருணாநிதி, மாவட்ட பொருளாளர் நாகராஜ் உட்பட பலர் பங்கேற்றனர்.நெல் விவசாயம் மற்றும் பனைத் தொழிலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் கன்னிகாபுரி பகுதியில் உப்பளம் அமைப்பதை உடனே தடுத்து நிறுத்தக் கோரியும் சாயல்குடி சுற்றுவட்டார பகுதிகளில் குடிநீர் ஆதாரமாக விளங்கும் மூக்கையூர், வடக்கு மூக்கையூர், கன்னிகாபுரி, எஸ். இலந்தைகுளம், குதிரை மொழி, ஐந்து ஏக்கர், மாணிக்க நகர் உள்ளிட்ட பல கிராம வாழ்வாதாரம் பாதிக்கப்படும் வகையில் அமைக்கப்பட உள்ள உப்பளத்தை தடுத்து நிறுத்தவும் வலியுறுத்தப்பட்டது.சாயல்குடி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி செவல்பட்டி சாலையில் கழிவுநீர் கால்வாயை சீரமைக்கவும் கோரிக்கை விடுக்கப்பட்டது.